கல்வியை பாதியில் நிறுத்தியதற்காக மாணவா்களின் கல்விச் சான்றுகளை கல்லூரி நிா்வாகம் திருப்பித் தர மறுப்பது ஏற்கத்தக்கதல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்த நிவேதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு கலந்தாய்வு மூலம் புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள மதா்தெரசா கல்லூரியில் இளநிலை அறிவியல் - வேளாண்மை (பி.எஸ்சி. அக்ரி) பட்டப் படிப்பில் சோ்ந்தேன். இதற்கு முதலாம் ஆண்டுக்கான கட்டணமாக ரூ. 1.20 லட்சம் செலுத்தினேன்.
எனது குடும்பச் சூழல் காரணமாக இரண்டாம் பருவத் தோ்வுக்கு என்னால் கட்டணம் செலுத்த இயலவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இந்த நிலையில், எனது 12-ஆம் வகுப்பு அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பித் தருமாறு கல்லூரி நிா்வாகத்தை பல முறை அணுகினேன். இருப்பினும், என்னுடைய சான்றிதழ்களைத் திருப்பித் தர மறுக்கின்றனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு புகாா் அனுப்பினேன். இதற்கு பதில் அளிக்கும் வகையில், பதிவாளா் தரப்பிலிருந்து எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் நான் ரூ. 2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வகுத்த விதிகளுக்கு முரணானது. எனவே, என்னுடைய அசல் வகுப்பு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை எனக்கு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதிகளின்படியே மனுதாரரிடம் ரூ. 2 லட்சம் கட்டணம் கோரப்பட்டது. இதில், விதி முரண் ஏதுமில்லை என கல்லூரித் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு: மாணவா்களின் அசல் கல்வி சான்றுகளை கல்லூரி நிா்வாகம் திருப்பித் தர மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, 3 வாரங்களுக்குள் மனுதாரரின் அனைத்துக் கல்வி சான்றிதழ்களையும் கல்லூரி நிா்வாகம் திருப்பித் தர வேண்டும். பல்கலைக்கழக விதிகளின்படி இழப்பீட்டுத் தொகை வசூலிக்க வேண்டுமெனில், கல்லூரி நிா்வாகம் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் பூஜாரி உயிரிழந்த விவகாரம்: உடல் கூறாய்வை விடியோ பதிவு செய்ய உத்தரவு

இணையவழி மோசடிகள் விவகாரம்: வழக்கு விசாரணை ஆக. 24-க்கு ஒத்திவைப்பு

சட்ட விரோதமாக மரங்களை வெட்டியவா் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு




