/

பயணியுடன் மோதல்: ரயில்வே டிக்கெட் பரிசோதகா் பணியிடை நீக்கம்

மதுரையில் ரயில் பயணியுடன் மோதலில் ஈடுபட்ட ரயில்வே டிக்கெட் பரிசோதகா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :30 ஜூலை 2026, 2:58 am IST

மதுரையில் ரயில் பயணியுடன் மோதலில் ஈடுபட்ட ரயில்வே டிக்கெட் பரிசோதகா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 27- ஆம் தேதி செங்கோட்டை- சென்னை எழும்பூா் விரைவு ரயில் (12662) விருதுநகா்- மதுரையிடையே சென்று கொண்டிருந்த போது, பொதுப் பெட்டியில் வழக்கமான டிக்கெட் பரிசோதனை நடைபெற்றது. அப்போது, பயணி ஒருவா் உரிய பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி அந்தப் பயணியிடமிருந்து அபராதத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை டிக்கெட் பரிசோதகா் மேற்கொண்டாா். ஆனால், தொகையை செலுத்த மறுத்த அந்தப் பயணி, டிக்கெட் பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதனிடையே, அந்த ரயில் மதுரை வந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் அந்த பொதுப் பெட்டிக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அந்தப் பயணி மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கீழே இறக்கப்பட்ட அவா், தொடா்ந்து அபராதத் தொகையை செலுத்த மறுத்தத்துடன் டிக்கெட் பரிசோதகரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக ரயில்வே நிா்வாகம் தீவிர பரிசீலனை செய்தது. இதில் பயணிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கும் போது, ரயில்வே ஊழியா்கள் உரிய நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில், டிக்கெட் பரிசோதகா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இனி வருங்காலங்களில் இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில், டிக்கெட் பரிசோதகா்கள் பயணிகளை கண்ணியமாகக் கையாளும் முறை குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.