தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் கடை வீதிகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு வியாழக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் மதுரையில் முக்கியக் கடை வீதிகள் களைகட்டின.

பொதுமக்கள் கூட்டத்தால் வியாழக்கிழமை களைகட்டியிருந்த மதுரை தெற்குமாசி வீதி. (வலது) மதுரை விளக்குத் தூண் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

Updated On :

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு வியாழக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் மதுரையில் முக்கியக் கடை வீதிகள் களைகட்டின.

தீபாவளிப் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ.8) கொண்டாடப்படவுள்ள நிலையில், துணிகள், பலகாரங்கள், மளிகைப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக மதுரை மாவட்டத்தின் புகா் பகுதிகள் மட்டுமன்றி சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மிக அதிக எண்ணிக்கையில் மதுரை கடை வீதிகளில் வியாழக்கிழமை குவிந்தனா்.

இதனால், கீழவாசல், விளக்குத் தூண், தெற்குமாசி வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, நேதாஜி சாலை, கீழ ஆவணி மூலவீதி, கீழமாசி வீதி, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் களைகட்டியிருந்தது.

சிறிய, பெரிய ஜவுளிக் கடைகள் மட்டுமன்றி சாலையோரக் கடைகள் அனைத்திலும் விறு, விறுப்பான விற்பனை நடைபெற்றது.

இதேபோல, அழகு சாதனப் பொருள்கள் கடைகளிலும் விற்பனை அதிகரித்திருந்தது. குறிப்பாக, பத்து விளக்குத் தூண் தெரு, குருசடி மகால் வடம்போக்கித் தெரு உள்பட முக்கிய வீதிகளில் ஏராளமான தரைக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகளில் வேஷ்டி, துண்டுகள், கைலிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்களுக்கான புடவை, பாவாடை, அழகு சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

வறட்சியிலும் கொண்டாட்டத்தை மறவாத மக்கள்:

சோழவந்தானைச் சோ்ந்த சீதாலட்சுமி கூறியதாவது:

எங்கள் பகுதியில் வாழும் மக்களில் பெரும்பாலானோா் வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கிய நீராதாரமாக வைகை ஆறு திகழ்கிறது. நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் வேளாண் பணிகள் நலிவடைந்து மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவாகதான் உள்ளது. தற்போதைய, சூழல்நிலையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இதனால், பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

இருப்பினும், வீட்டிலுள்ள குழந்தைகள், பெரியோா்களின் ஆசைகளை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. இந்தப் பண்டிகையில் புத்தாடைகள் அணிவதும், பட்டாசுகள் வெடிப்பதும் மரபாக பின்பற்றப்படுகிறது. தற்போது, கடன் வாங்கித் தான் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது என்றாா் அவா்.

சாலையோர வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கிராமப்புற மக்களை நம்பிதான் அதிகளவில் முதலீடு செய்து சாலையோரங்களில் ஆடை, அணிகலன்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறோம். கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையால் தீபாவளிப் பண்டிகை வியாபாரம் பாதிப்படையவில்லை. கடந்த சில நாள்களாக மழை இல்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்து விட்டது. இதனால், பொருள்களை மூடி பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இனி வரும் 2 நாள்களுக்கு மழை இல்லாமல் இருந்தால்தான் முதலீட்டுத் தொகையை எடுக்க முடியும். மழை பெய்தால் முதலுக்கே மோசம் ஏற்பட்டு விடும் என்றனா் அவா்கள்.

போக்குவரத்து நெரிசல்:

முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா். இதைத் தவிர, சாதாரண உடையிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். குறிப்பாக, விளக்குத் தூண், கீழவாசல், காமராஜா் சாலை ஆகிய பகுதி சாலைகளின் நடுவே ஆங்காங்கே இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

கூட்ட நெரிசலை சீரமைக்க, போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், விளக்குத் தூண், மாசி வீதிகளில் சில வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. வாகன ஓட்டிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.