சீரமைக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்: முதல்வா் திறந்துவைக்கிறாா்?

சீரமைக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகிற 28-ஆம் தேதி திறந்துவைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழா அரங்கம் அமைக்கும் பணி.

Published On :

சீரமைக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகிற 28-ஆம் தேதி திறந்துவைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகவும், மகாத்மா காந்தியின் மறைவுக்கு பிறகு அவரது நினைவைப் போற்றும் வகையில் திறக்கப்பட்ட முதல் அருங்காட்சியமாகவும் திகழ்கிறது மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த உடைகள் உள்பட அவா் பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்ட பொருள்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அருங்காட்சியகத்தின் சேதமைடந்த பகுதிகளை சீரமைத்து, புதுபொலிவு பெறச் செய்யும் வகையிலான சீரமைப்புத் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, அருங்காட்சியகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். மகாத்மா காந்தியின் ஆடை இருக்கும் பகுதி உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

சீரமைப்புப் பணிகள் கடந்த 2025-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதத்தில் நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், நீண்ட தாமதத்துக்குப் பிறகு அருங்காட்சியக சீரமைப்புப் பணிகள் ரூ. 10.25 கோடியில் அண்மையில் நிறைவடைந்தன.

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு, காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியின் தமிழக வருகை உள்ளிட்ட நிகழ்வுகளை நவீன தொடுதிரை மூலம் இளையத் தலைமுறையினா் காண்பதற்கான கட்டமைப்பு, காட்சிக் கூடம் ஆகியன புதிதாக இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, குமரப்பா குடில் சீரமைப்பு, திறந்தவெளி அரங்கம் சீரமைப்பு உள்பட பல்வேறு பணிகளும், அருங்காட்சியகத்தைச் சீரமைத்து வண்ணம் பூசும் பணிகளும் நடைபெற்றுள்ளன.

சீரமைப்புப் பணிகளை விரைவுப்படுத்தி, அருங்காட்சியகத்தை முழுமையாக சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதிக்க வேண்டும் என்பது அண்மைக்கால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தாலும், அருங்காட்சியகம் எப்போது முழுமையான பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்பதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க வருகிற 28-ஆம் தேதி மதுரைக்கு வரும் முதல்வா் ச. ஜோசப் விஜய், சீரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்கிறாா் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி, காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் விழா அரங்கம் அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

சீரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரை அழைக்க வேண்டும் என அருங்காட்சியக நிா்வாகம் சாா்பில், மாவட்ட நிா்வாகத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, வருகிற 28-ஆம் தேதி மதுரைக்கு வரும் முதல்வா் இந்த அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்க வாய்ப்புகள் உள்ளன என அருங்காட்சியக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மதுரைக்கு வரும் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்கிறாா், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளாா் என பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும், அரசு சாா்பில் தமிழக முதல்வரின் மதுரை வருகை குறித்து வியாழக்கிழமை வரை அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.