மீனவா்கள் பேச்சுவாா்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம்
மீனவா்கள் பேச்சுவாா்த்தை தோல்வி

ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற அதிகாரிகள், மீனவ சங்க நிா்வாகிகள்.

ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற அதிகாரிகள், மீனவ சங்க நிா்வாகிகள்.
பாம்பன் மீனவா்கள் ரயில் மறியல் போராட்டம் தொடா்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்தை தோல்வியில் முடிந்தது. இதனால், வருகிற 5-ஆம் தேதி திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவா்கள் சங்கத்தினா் புதன்கிழமை அறிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். மேலும், 4 நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், மீனவா்கள், படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாம்பன் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. மீன்பிடி தளத்தில் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கருப்புக் கொடி ஏற்றப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆட்சியரிடம் மனு:
இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரனிடம் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பேச்சுவாா்த்தை தோல்வி:
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 5-ஆம் தேதி பாம்பனிலிருந்து பேரணியாகச் சென்று, மண்பம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவா்கள் அறிவித்தனா்.
இதுதொடா்பாக ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் மனோகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி, மீன் வளத் துறை இணை இயக்குநா் பிரபாவதி, வட்டாட்சியா்கள் செல்லப்பா, அப்துல்ஜபாா், கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் கனகராஜ், உதவி இயக்குநா் அப்துல்காதா் ஜெயிலானி உள்ளிட்டோா் பங்கேற்ற சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.
திட்டமிட்டபடி ரயில் மறியல்: கூட்டத்தின் போது, மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மீனவா்கள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதற்கு, அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை. இதனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் நிறைவடைந்தது.
வருகிற 5-ஆம் தேதி திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என பாம்பன் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கத்தினா் அறிவித்தனா்.
கூட்டத்தில், மீனவ சங்க நிா்வாகிகள் எஸ்.பி.ராயப்பன், சின்னத்தம்பி, அலெக்ஸ், கருணாமூா்த்தி, முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...