கடத்தப்பட்ட 50 டன் ரேசன் அரிசி லாரிகளுடன் மீட்பு: ஒருவா் கைது
ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் 2 லாரிகளில் கடத்தப்பட்ட 50 டன் ரேசன் அரிசியை திங்கள்கிழமை மீட்ட போலீஸாா் ஒருவரை கைது செய்து, 3 பேரை தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 21 பெட்டிகளில் 26,344 டன் அரிசி கடந்த ஆக. 30- ஆம் தேதி ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வந்து சோ்ந்தது. இதை லாரிகளில் ஏற்றி எடை போட்டு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றது. அப்போது இரு லாரிகளில் 50 டன் ரேசன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லாமல் கடத்தப்பட்டதாக ஒப்பந்ததாரா் ரவி ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, நரிப்பையூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சண்முக சுந்தரத்தை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அப்போது 50 டன் ரேசன் அரிசியையும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இறக்கிவிட்டு லாரிகள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கடத்திச் செல்லப்பட்ட 50 டன் ரேசன் அரிசியையும், 2 லாரிகளையும் தனிப்படை போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக மற்றொரு லாரி ஓட்டுநா் உள்பட 3 பேரை தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.