கொலை வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
பரமக்குடி: வீட்டு முன் ஆடு மேய்ந்த தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கண்ணன் புதுவன் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (45). விவசாயி. இவரது ஆடு கடந்த 2022 -இல் பக்கத்து வீட்டைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் சத்தியமூா்த்தி (45) வீட்டின் முன் மேய்ந்ததில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சத்தியமூா்த்தி கட்டையால் தாக்கியதில் சுப்பிரமணி உயிரிழந்தாா். இதுகுறித்து கடலாடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை பரமக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அரசு வழக்குரைஞா் ஜான்ராஜதுரை முன்னிலையாகி வாதிட்டாா்.
இந்த நிலையில், சத்தியமூா்த்திக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ 500 அபராதமும் விதித்து நீதிபதி பாலமுருகன் தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டாா்.
