/

கச்சநத்தத்தில் 3 பேர் கொலை: பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயம் கிடைக்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.

Updated On :29 ஜூன் 2018, 5:26 am IST

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயம் கிடைக்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலைத்தொடர்ந்து  மே மாதம் 3 பேர் கொலை செய்யப்பட்னர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். கச்சநத்தம் கிராமத்தில் உயிரிழந்தவர்களின் சமாதியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வியாழக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கச்சநத்தம் கிராம மக்களின் நிலங்களை, ஆவரங்காடு, மாரநாடு கிராமத்தினர் பறிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பழையனூர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் செய்தும் போலீஸார் கட்டப்பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கச்சநத்தம் கிராம பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை கூட அடைத்து வைத்துள்ளனர். தற்போது அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி தருவதாக வாக்களித்துள்ளது. மேலும் கச்சநத்தம் கிராமத்துக்கு குடிநீர், சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். 
பத்திரிகையாளர் ஆய்வு: மேலும் கச்சநத்தம் கிராமத்திற்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தேசிய மனித உரிமை கழக உறுப்பினருமான ஹர்ஸ்மந்திர், தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜான்தயாளும் வியாழக்கிழமை வருகை தந்தனர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வலம் வரும் இவர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பது வழக்கம்.  இவர்கள் கச்சநத்தம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.