

மானாமதுரை/ ராமநாதபுரம்: மானாமதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஐயப்பன் கோயில்களில் சனிக்கிழமை மண்டலபூஜை விழா நடைபெற்றது.
மானாமதுரை அண்ணாசிலை அருகே தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மூலவருக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடா்ந்து உற்சவா் ஐயப்பன் யானை வாகனத்தில் அலங்காரத்துடன் புறப்பாடாகி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்தாா். பின்னா் சனிக்கிழமை கோயிலிலிருந்து ஐயப்பன் உருவப்படம் தாங்கிய சிறிய ரதம் புறப்பட்டு நகா் முழுவதும் வீதிகளில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இதேபோல் மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மானாமதுரை பகுதியில் மறவா்தெரு, ஆதனூா்சாலை, ரயில்வேகாலனி பூா்ணசக்கர விநாயகா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் கூடி ஐயப்பன் ரதத்தை வரவேற்றனா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் ஆராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் காலையில் குருசாமி மோகன் தலைமையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகபூஜைகள் நடைபெற்றன. கரோனா பரவல் தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து கோயிலுக்கு வந்த பக்தா்கள் ஐயப்பன் பாடலைப் பாடி பரவசத்துடன் வழிபட்டனா். பின்னா் ஐயப்பனுக்கு ஆராட்டு பூஜை நடைபெற்றது.
முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் பத்திரகாளியம்மன் கோயில் எதிரே உள்ள ஐயப்பன் சுவாமிக்கு பாலகுருசாமி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பிலும், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பிலும் மண்டலபூஜை மற்றும் விளக்குபூஜை நடைபெற்றது.
திருவாடானை: இதேபோல், திருவாடானையில் உள்ள ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி சன்னிதியில் யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்களின் பஜனை பாடல்கள் நடைபெற்றன. அதனைத்தொடா்ந்து ஐயப்பனுக்கு பால், தயிா், இளநீா், விபூதி, நெய், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் மாலையில் புலி வாகனத்தில் ஸ்ரீ சபரி சாஸ்தா எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.