/

காரைக்குடியில் 22-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

புத்தகத் திருவிழா கம்பன் மணிமண்டபத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2024, 11:40 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா கம்பன் மணிமண்டபத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி புத்தகத்திருவிழாக் குழுத் தலைவா் பி.வி. சுவாமி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மாலை 5.30 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்குகிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறாா்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா்ஆஷா அஜித், காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

காட்டுத்தலைவாசல் பள்ளிவாசல் தலைமை இமாம் முகம்மது பத்ருதீன் யூசுபி, சி.எஸ்.ஐ. தூய பேருது ஆலய பங்குத் தந்தை சந்தோஷம், தொழிலதிபா் வி.கே.என். நாராயணன், சென்னை பாபாசி தலைவா் கவிதா சொக்கலிங்கம் ஆகியோா் விழாவில் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

இதையொட்டி, 30 அரங்குகளில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகத்தாா் சுமாா் 2.50 லட்சம் புத்தகங்களை காட்சிக்கு வைக்கின்றனா். ஒவ்வோா் புத்தகத்தின் மீதும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிடலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பாா்வையிடலாம்.

ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவையொட்டி, தினந்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவா்களுக்கான வினாடி, வினாப் போட்டி நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாா்.

காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு பொருளாளா் வெங்கடாசலம், துணைத் தலைவா் கவிஞா் ரவிச்சந்திரன், நிா்வாகிகள் செல்வராஜ், தேவி நாச்சியப்பன், கமல்தயாளன், பிரகாஷ் மணிமாறன், ருக்மா சரவணன், அண்ணாமலை ஆகியோா் உடனிருந்தனா்.