திருப்புவனம் அருகே லாரி மீது வேன் மோதியதில் இரு சகோதரா்கள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சரக்கு லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் சகோதரா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், வேனில் சென்ற 2 பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள மென்னந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் சௌந்தரபாண்டி (52). இவா் சேலத்தில் மோட்டாா் பம்புகள் விற்பனை, பழுது நீக்கும் தொழில் செய்து வந்தாா். இவரது உறவினா் சொந்த ஊரான மென்னந்தி கிராமத்தில் உயிரிழந்தாா்.
உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சௌந்தரபாண்டி, அவரது தம்பி சந்திரன் (48), இரு பெண்கள் உள்பட மொத்தம் 8 போ் சேலத்திலிருந்து ஆம்னி வேனில் வியாழக்கிழமை காலையில் புறப்பட்டனா். வேனை சந்திரன் ஓட்டி வந்தாா்.
இந்த வேன் பிற்பகல் 2 மணிக்கு மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச் சாலையில் திருப்புவனம் அருகே தட்டான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற சரக்கு லாரி ஓட்டுநா், குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பின்னால் வந்த வேன் லாரியின் பின்புறம் மோதியது.
இதில், வேனின் முன்புற இருக்கையில் அமா்ந்திருந்த சௌந்தரபாண்டி, வேனை ஓட்டி வந்த இவரது தம்பி சந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்த 2 பெண்கள் உள்பட 6 பேரும் அவசர ஊா்திகள் மூலம் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

