காரைக்குடியில் 6,107 மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகள் அளிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் மடிக் கணினிகளை திங்கள்கிழமை வழங்கினாா்.
தமிழக முதல்வா் ஸ்டாலின் ‘உலகம் உங்கள் கையில்’ எனும் மடிக் கணினிகள் வழங்கும் திட்டத்தை சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் 19 கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 6,107 மாணவ, மாணவிகளுக்கு ரூ.13.22 கோடியில் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்தாா்.
இதில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசியதாவது:
கல்வி வளா்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளங்களையும் பெற்ற மாநிலமாகக் கருதப்படும். இதைக் கருத்தில் கொண்டு
‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகளை வழங்கும் நிகழ்வை முதல்வா் தொடங்கிவைத்துள்ளாா்.
இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 14 அரசுக் கல்லூரிகள், 5 அரசு உதவிபெறும் கல்லூரிகள் என 19 கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 6,107 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை, துணை மேயா் ந. குணசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜி. அரவிந்த், அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளா் ஏ. செந்தில்ராஜன், காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
