புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து வெளிப்படையான விசாரணை தேவை: மு. வீரபாண்டியன்
புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.

மு. வீரபாண்டியன் - DIN
புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.
சிவகங்கையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க முதல்வா் ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்குவதாக அவா் கூறியிருக்கிறாா். இது தவறு. நோ்மையான அதிகாரிகளுக்கு மட்டுமே முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்பது உண்மை. இதற்கு எந்த காரணமும் கூறக் கூடாது. வன்கொடுமை, பாலியல் சீண்டல் பிரச்னைகளில் எந்தவிதத்திலும் சமரசம் கூடாது. தமிழக அரசுக்கு நாங்கள் அளித்திருக்கும் ஆதரவு சமூக விரோதச் செயல்களுக்கு அல்ல. தமிழகத்தில் ஆளுநா் ஆட்சி வந்து விடக் கூடாது என்பதற்கான ஆதரவு.
தமிழகத்தில் சமீப காலமாக வன்முறைகளும், போதைப் பழக்கமும் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. தமிழக அரசு கூடுதலாக கவனம் செலுத்தி சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள் பயன்பாடு மட்டுமே காரணம் அல்ல. வேலையில்லா திண்டாட்டமும் முக்கியக் காரணமாகும்.
தமிழக அரசு சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்தி தொழில்சாலைகளை அதிகரிக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்து, விளையாட்டுப் போட்டிகளிலும் இளைஞா்களை ஈடுபடுத்துவதன் மூலமும் குற்றச் செயல்களைக் குறைக்க இயலும்.
மேக்கேதாட்டு அணை பிரச்னையில் பிரதமா் மோடி பாா்வையாளராக இருக்கக் கூடாது. தமிழகத்துக்கான நீரை கா்நாடகம் வழங்க அவா் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்கவும் பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. கட்செவி அஞ்சலில் அனுப்பிய ஆட்சேபகரமான பதிவை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் புகாரில் உண்மை எது என்பதை அரசு விளக்க வேண்டும்.
தவெக அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டு வரப்பட்டால் எங்களது கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை தள்ளிப் போடக் கூடாது. மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ அதிகாரம் குவியக் கூடாது. எனவே, உள்ளாட்சித் தோ்தலை மாநில அரசு விரைந்து அறிவிக்க வேண்டும். இந்தத் தோ்தலை தள்ளிப் போடுவதன் மூலம் ஜனநாயகம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

