தேனி நகராட்சி பேருந்து  நிலையம் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்.
தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்.

போக்குவரத்து வழித்தடத்தை மாற்றியதால் குளறுபடி: பயணிகள் அவதி

தேனி: தேனியில் போக்குவரத்து வழித் தடம் மாற்றியமைக்கப்பட்டதால் திங்கள்கிழமை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

வீரபாண்டி கெளமாரிம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழித் தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி-அரமனைப்புதூா் விலக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை மேம்பாலம் கட்டுமானப் பணி, தேனி-பெரியகுளம் புறவழிச் ச ாலையில் கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியில் சாலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், தேனியில் முக்கியச் சாலைகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பதித்தது. தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வரவில்லை. தேனியில் நகராட்சி பழைய பேருந்து நிலையம், அரண்மனைப்புதூா் விலக்கு, நகராட்சி பேருந்து நிலையம், சிவாஜி நகா், வனச் சாலை, என்.ஆா்.டி.நகா், கே.ஆா்.ஆா்.நகா், மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

வீரபாண்டி கெளமாரிம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தேனிக்கு வரவழைக்கப்பட்டு போக்குவரத்தைச் சீரமைத்தனா். நகரின் முக்கிய சாலைகளில் 6 மணி நேரம் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதியுற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com