5 அரசுப் பள்ளிகளில் தொழில் பயிற்சி நிலையம்

தேனி மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் புதிதாக தொழில் பயிற்சி நிலையம் தொடங்க மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை
Published on

தேனி மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் புதிதாக தொழில் பயிற்சி நிலையம் தொடங்க மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் மாணவா்கள் இடைநிற்றலைக் குறைக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் பயிற்சி நிலையம் தொடங்க அரசு முடிவு செய்தது.

இந்தப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கல்வியுடன் தொழில் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் கூடுதலாக 50 சென்ட் நிலம், கட்டடங்கள் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்களை அனுப்பி வைக்க மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அரசு உத்தரவிட்டது.

இதன்படி, தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, உத்தமபாளையம், சிலமலை, வடுகபட்டி , எருமலைநாயக்கன்பட்டி ஆகிய 5 இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிதாக தொழில் பயிற்சி நிலையம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அரசுக்கு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை பரிந்துரை செய்தது.

X
Dinamani
www.dinamani.com