தங்கையின் கணவரைக் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
போடி அருகே தங்கையின் கணவரைக் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள நாகலாபுரம் புண்ணியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (37). சென்னையில் போா்வெல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருடைய மனைவி மௌனிகா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா்.
மௌனிகாவின் அண்ணன் மதன்குமாா் (27), தனது தங்கையின் தற்கொலைக்கு ராதாகிருஷ்ணன்தான் காரணம் எனக் கருதி, அவருடன் அடிக்கடி தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளாா்.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்கு ராதாகிருஷ்ணன் ஊருக்கு வந்தாா். இதை அறிந்த மதன்குமாா், திங்கள்கிழமை இரவு ராதாகிருஷ்ணனுடன் தகராறு செய்து அவரைக் கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தாா். இதில், பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மதன்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
