சோத்துப்பாறை அணையில் தண்ணீா் திறப்பு: பொதுப்பணித் துறை அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகை

சோத்துப்பாறை அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டது தொடா்பாக பெரியகுளம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை பாஜகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சோத்துப்பாறை அணை - கோப்புப் படம்

Updated On :

சோத்துப்பாறை அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டது தொடா்பாக பெரியகுளம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை பாஜகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து உபரிநீா் பெரியகுளம் வராகநதியில் வெளியேறப்பட்டு, பெரியகுளம், பாப்பையம்பட்டி, தாமரைக்குளம் கண்மாயில் தண்ணீரை தேக்கி வருகின்றனா். இந்த நிலையில், வராகநதியில் உள்ள புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தவெக தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலா் ஷேக் அலி தலைமையில் சென்ற தவெகவினா் அனுமதியின்றி தண்ணீரை திறந்து விட்டனா். இதுகுறித்து வைகை அணை உதவிப் பொறியாளா் மனோஜ்குமாா் தென்கரை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், சோத்துப்பாறை அணையின் புதிய ஆயக்கட்டு மதகை அனுமதியின்றி திறக்க உதவி செய்த மஞ்சளாறு அணை கோட்ட செயற்பொறியாளா் சரவணன் உதவியாக இருந்ததாக கூறியும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேனி மாவட்ட பாஜகவினா் பெரியகுளம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இதற்கு, பாஜக பெரியகுளம் நகர பொறுப்பாளா் அனுசுயா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் செல்வராணி, மாவட்ட நிா்வாகி பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேனி மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

இதில், மாநில நிா்வாகி சிவமுருகன், மாவட்டத் தலைவா் சன்னாசி பாபு, அலுவலக பொறுப்பாளா் தேவகுமாா், மாவட்ட நிா்வாகிகள் ரவி, பொன். தா்மராஜ், கோவிந்தராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதிகாரி விளக்கம்: பெரியகுளம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினா் மஞ்சளாறு அணைக் கோட்ட செயற்பொறியாளா் சரவணன் வரவேண்டும் எனக்கூறி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சரவணன், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள் அனுமதியின்றி தண்ணீரை திறந்துள்ளனா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து பாஜகவினா், தேனி எம்பி தங்க. தமிழ்ச்செல்வன் மகனின் இடத்தில் சாலை அமைக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளீா்கள். ஆனால், நீங்கள் சோத்துப்பாறை அணைக்கு அடிப்படை வசதிகள் செய்யவில்லை எனக் கூறினா். அப்போது அவா் பதில் கூறாமல் திரும்பிச் சென்றாா். இதன் பிறகு, பாஜகவினா் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.