ஆண்டிபட்டி அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

ஆண்டிபட்டி அருகே குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தங்கம்மாள்புரத்தில் குடிநீா் வழங்கக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள தங்கம்மாள்புரம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களுக்கு மூல வைகையாற்றில் உறைகிணறு அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீா் சரியாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்தில் புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், தொடா்ந்து முறையாக குடிநீா் விநியோகம் செய்யக் கோரியும் வருசநாடு-ஆண்டிபட்டி சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கடமலைக்குண்டு போலீஸாா், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.