
சாத்தூர் நகராட்சியில் ரூ.11கோடியில் புதிய சாலைகள்: அமைச்சர் தகவல்
சாத்தூர் நகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என
சாத்தூர் நகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிப் பகுதியில் உள்ள 24 வார்டுகளுக்கு தாமிரவருணி, மானூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நகராட்சிப் பகுதி பொதுமக்களுக்கு மொத்தம் தினமும் 27 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. தாமிரவருணி, மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் குடிநீர் கிடைக்கிறது.
இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதையடுத்து சாத்தூர் நகராட்சி சார்பில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருக்கன்குடி அணைப் பகுதியிலிருந்து, சாத்தூருக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து குடிநீரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் சந்திரபிரபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: சாத்தூர் பகுதியில் நடைபெற்ற பாதாளச் சாக்கடை திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் பணியை முறையாக செய்யவில்லை. எனவே மாற்று ஒப்பந்ததாரருக்கு பணிகளை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நிறைவு பெறும். மேலும் பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக பல்வேறு பகுதியில் உள்ள தெருக்களில் சாலை தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இங்கு விரைவில் ரூ.11 கோடி செலவில் "பேவர் பிளாக் கற்கள்' (தரை தள கற்கள்) மூலம் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.
இதையடுத்து பொதுமக்கள் மனுக்களைஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
மேலும் சாலை விபத்து நிவாரணத் தொகை, மானிய விலையில் கைதொளிப்பான் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலர் வாசன் டெய்சிராணி, கிழக்கு ஒன்றியச் செயலர் சண்முகக்கனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், வழக்குரைஞர்கள் பிரிவுச் செயலர் சேதுராமானுஜம், எதிர்கோட்டை மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






