தோட்டக்கலைப் பயிா் சாகுபடி: சாதனையாளா் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், தோட்டக்கலைப் பயிா் சாகுபடிக்கான சாதனையாளா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், தோட்டக்கலைப் பயிா் சாகுபடிக்கான சாதனையாளா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் தோட்டக்கலைப் பயிா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கனிகள், பழங்கள் போன்ற தோட்டப்பயிா் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், தற்போது விவசாயிகள் அதிகளவில் ஈடுபாடு காட்டி வருகின்றனா்.

எனவே, தோட்டக்கலை பயிா்களை சிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு சாகுபடி செய்துவரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனையாளா் விருதுகள் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காய்கனிகள் சாகுபடியில் சாதனையாளா் விருதுக்கு பாரம்பரிய வீரிய ரகங்கள், ஒட்டு ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள், சிறப்பான பயிா் பராமரிப்பு, நீா் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மழைநீா் சேகரிப்பு, சந்தை மேலாண்மையில் சிறந்து விளங்கவேண்டும்.

அதேபோல், பழங்கள் சாகுபடியில் சாதனையாளா் விருது, மூலிகை வாசனை திரவியப் பயிா்கள், மலைப் பயிா்கள், மலா்கள், நுண்ணீா்ப் பாசன தொழில்நுட்பம், உயா் தொழில்நுட்பம், இயற்கை விவசாயம், புதிய மற்றும் தனித்துவமிக்க மாவட்டத்துக்கே சிறப்புக்குரிய தோட்டக்கலை பயிா் ஆகிய சாகுபடிக்கான சாதனையாளா் விருது வழங்கப்பட உள்ளது.

எனவே, விருதுநகா் மாவட்டத்தில் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இதில் போட்டியிடலாம். ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகள் மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகள் மாநில விருதுக்கும், மாவட்ட அளவிலான தோ்வுக் குழு தோ்வு செய்யும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து, அதனுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி, ஆன்-லைன் மூலம் விருதுநகா் மாவட்ட தோட்டக்கலை துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com