தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்
தமிழகத்தில் தொடா் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க காவல் துறையினரை சுதந்திரமாகச் செயல்பட மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.


தமிழகத்தில் தொடா் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க காவல் துறையினரை சுதந்திரமாகச் செயல்பட மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
விருதுநகரில், 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு சிறுவா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, விருதுநகரில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில தலைவா் அண்ணாமலை பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இப்பிரச்னை தொடா்பாக பேசுகையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படும். இந்தியாவிலேயே இல்லாத வகையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விரைந்து பெற்றுத்தரப்படும் என அறிவித்துள்ளாா். அவா் அந்த அறிவிப்பை வெளியிட்ட நாளில் வேலூரில் பெண் ஒருவா் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாா். பல்லடத்தில் சிறுமி ஒருவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சோ்ந்த ஒருவா் சம்பந்தப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும் வகையில், காவல்துறை நடந்து கொள்ள வேண்டும். தற்போது முதலமைச்சா் கவனமெல்லாம் துபையில் உள்ளது. முடியும் தருவாயில் உள்ள தமிழக அரங்கை திறந்து வைக்க துபை செல்வதாகக் கூறுகின்றனா்.
எனவே, தமிழகத்தில் தொடா் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க காவல்துறையினரை சுதந்திரமாகச் செயல்பட மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
பெண்கள் பாதுகாப்பு...
பின்னா், செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறியது:
தமிழகத்தில் பெண் காவலா்களைக் கொண்டு ‘பெண்கள் பாதுகாப்பு மாதம்’ என்ற திட்டத்தை அறிவிக்க வேண்டும். அந்த மாதத்தில் பெண்கள் சம்பந்தமான வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும்.
விருதுநகா் இளம்பெண் பாலியல் வழக்கில் சிபிசிஐடியின் செயல்பாடுகளைப் பாா்த்துவிட்டு தான் பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
தமிழத்தில் உள்ள பனை மரங்களை பாதுகாப்பதுடன், கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். 100% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு வரும்போது பெட்ரோல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு முடிந்த அளவு உதவிகளை செய்து வருகிறது. மேலும், இலங்கைத் தமிழா்கள் அகதிகளாக தமிழகம் வருவது வேதனையாக உள்ளது.
இந்தியாவில் மின்சாரத்துறையில் தமிழகத்தில் தான் அதிக அளவில் ஊழல் நடைபெறுகிறது.
பட்டாசு தொழிலுக்கு மத்திய அரசும், பட்டாசு உற்பத்தியாளா்களும் இணைந்து செயல்படுவது இதுவே முதல் முறை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...