திமுக கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

திமுக கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்கும் எடப்பாடி பழனிசாமி.
சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்கும் எடப்பாடி பழனிசாமி.

திமுக கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சிவகாசியில் திங்கட்கிழமை சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் வாக்கு சேகரித்தபோது பேசியதாவது, எட்டு மாத கால திமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். புதிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தினமும் ஸ்டாலின் மூன்று அல்லது நான்கு இடங்களைச் சென்று பார்வையிடுகிறார், ஆய்வு செய்கிறார். திமுக கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டது. இவர்கள் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். 

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் தொகுப்புத் திட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் அதிமுக ஆட்சியில் சிறப்பாக பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது, ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டது. கரோனா வைரஸ் தாக்குதல் இருந்த சமயத்தில் மக்களுக்கு அதிமுக அரசு ரூபாய் 2500 வழங்கியது. அப்போது ஸ்டாலின் ரூபாய் 5000 வழங்கலாம் எனக் கூறினார். ஆனால் இப்பொழுது 100 ரூபாய் கூட அவர் வழங்கவில்லை. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு அரிசியில் வண்டு, புளியில் பல்லி உள்ளிட்டவை கிடந்தன. 

திருத்தணியைச் சேர்ந்த ஒருவர் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது என பேட்டி அளித்தார். அவர் மீது திமுக அரசு வழக்குப் போட்டது. இதனால் மனமுடைந்த அந்த நபரின் மகன் தற்கொலை செய்து கொண்டார். சர்வாதிகாரி ஸ்டாலின் இயங்குகிறார். அதிமுக, திமுகவை நேர்மையான முறையில் சந்திக்கும். திமுகவின் 8 மாத கால ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. திறமையற்ற ஆட்சி நடைபெறுகிறது. அதிமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். 

2017இல் சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என நான் அறிவித்தேன். அதன்படி தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் மாநகராட்சிக்கு புதிய கட்டடம், கலை அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 444 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் தீட்டப்பட்டு அதிமுக அரசு அறிவித்தது. தீப்பெட்டி பட்டாசு மீதான ஜிஎஸ்டி வரி அதிமுக ஆட்சியில் குறைக்கப்பட்டது. 

பட்டாசு தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பாதுகாப்புப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் நவீன தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. திமுகவினர் தேர்தல் வாக்குறுதி அளித்த நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. பெண்களுக்கு மாதம் 1,000 கொடுக்க வேண்டும் என்றார்கள், கொடுக்கப்படவில்லை. எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கப்படவில்லை. 5 பவுன் நகை வங்கியில் அடமானம் வைத்தவர்கள் கடன்கள் ரத்து செய்யப்படும் என கூறினார்கள். வங்கியில் 45 லட்சம் பேர் 5 பவுன் நகை அடகு வைத்து உள்ளனர். 

இதில் 13 லட்சம் பேர்தான் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என திமுக அரசு அறிவித்தது. இதனால் மற்றவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சிவகாசியில் 48 வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றும். தமிழகத்திலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றார் எடப்பாடி கே பழனிச்சாமி. இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com