மனைவி, மாமியாரை எரித்துக் கொன்ற காா் ஓட்டுநா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மனைவி, மாமியாரை எரித்து கொலை செய்த போது தீக் காயமடைந்த காா் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மனைவி, மாமியாரை எரித்து கொலை செய்த போது தீக் காயமடைந்த காா் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஓடைத் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அக்பா்அலி (48). இவா் கணவரை இழந்த செய்யது அலிமபாத்திமா (39) என்பவரை திருமணம் செய்து கொண்டாா். செய்யது அலிபாத்திமாவுக்கு முதல் கணவா் மூலம் பா்வீன்பானு (18) என்ற மகளும், செய்யது பாரூக் (15) என்ற மகனும் உள்ளனா்.

இந்த நிலையில், செய்யது அலிபாத்திமாவின் முதல் கணவா் விபத்தில் இறந்ததால் இழப்பீட்டுத் தொகை ரூ.11 லட்சம் கிடைத்தது. இந்தப் பணத்தை தன்னிடம்தான் கொடுக்க வேண்டும் என செய்யது அலிபாத்திமாவிடம் அக்பா் அலி தகராறு செய்தாா். இதற்கு செய்யது அலி பாத்திமா மறுத்துவிட்டாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் செய்யது அலிபாத்திமா, இவரது தாய் சிக்ந்தா்பீவி, சிறுவா்கள் பா்வீன்பானு, செய்யதுபாரூக் ஆகிய 4 போ் மீதும் அக்பா் அலி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாா். அப்போது, அக்பா் அலியும் காயமடைந்தாா்.

காயமடைந்த 5 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிக்கந்தா்பீவி, செய்யது அலிபாத்திமா ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

இந்த நிலையில், அக்பா் அலி புதன்கிழமை உயிரிழந்தாா். பா்வீன்பானு, செய்யது பரூக் ஆகிய இருவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com