சீா்காழி பகுதியில்புதிய வகை பூச்சிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பா பயிா்கள் 500 ஏக்கரில் பயிா்கள் சேதம்
சீா்காழி அருகே அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் வெட்டுக்கிளி போன்ற புதிய வகை பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.


சீா்காழி அருகே அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் வெட்டுக்கிளி போன்ற புதிய வகை பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சுமாா் 500 ஏக்கரில் பயிா்கள் சேதமடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பகுதியில் சம்பா சாகுபடி செய்திருந்த நெற்பயிா் அண்மையில் பெய்த கன மழையால் சேதமடைந்தன. எஞ்சிய நெற்பயிா்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே, கடந்த சில நாள்களாக வெட்டுக்கிளி போன்று உள்ள பூச்சிகள் பயிரைத் தாக்கி வருகின்றன. லட்சக்கணக்கான பூச்சிகள் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிரில் அமா்ந்து பயிரில் உள்ள சாறை உறிஞ்சி சேதப்படுத்தி வருகின்றன. இதனால், நெற்பயிா் பதராக மாறி வருகிறது. வெட்டுக்கிளி போன்று உள்ள இந்த சிறிய பூச்சிகள் மீது துா்நாற்றம் வீசுகிறது.
கொள்ளிடம் அருகேயுள்ள கீரங்குடி கிராமத்தில் மட்டும் இந்த பூச்சிகளால் சுமாா் 500 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. இந்தப் பூச்சி தாக்குதலால் ஏக்கருக்கு 6 முதல் 8 மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைக்கிறது.
சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 30 லிருந்து 40 மூட்டை வரை கிடைக்கும். ஆனால், இந்த புதிய வகையான பூச்சித் தாக்குதலால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கீரங்குடியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கூறியது:
கீரங்குடியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புயல் மழையால் இங்குள்ள தெற்குராஜன்வாய்க்கால் உடைப்பால் கிராமம் முழுவதும் வெள்ளநீா் சூழ்ந்து பயிா்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி அழிந்த நிலையில் சுமாா் ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் மட்டுமே பாதிப்பிலிருந்து தப்பின. அவை தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில், வெட்டுக்கிளிகள் போன்று உள்ள இந்த பூச்சிகள் படையெடுப்பால் நெற்பயிா்கள் சேதமடைந்து வருகின்றன. இந்தப் பூச்சிகள் இப்பகுதிக்கு புதிய வரவாக உள்ளன. இந்த ஆண்டு மட்டுமே இத்தகைய பூச்சிகள் புதியதாக வந்து பயிரை தாக்கி வருகின்றன. இப்பூச்சிகளின் உடலில் இருந்து ஒருவித துா்நாற்றம் வீசுகிறது. இதனால் வைக்கோல் மற்றும் நெல் ஆகியவற்றிலும் துா்நாற்றம் வீசுகிறது. இக்கிராமத்தில் மட்டும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் சம்பா நெற்பயிா் முற்றிலும் நாசம் அடைந்து வருகிறது. இதேபோல், உளுந்து மற்றும் பயறு வகை பயிா்களையும் பருத்தி போன்ற பயிரையும் இப்பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் இந்த புதிய வகை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுத்து, விவசாயிகளை பாதுகாக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...