நாகை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் குறைப்பு: ஆட்சியரிடம் புகாா்
நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இம்முகாமில், தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவி பணிகள் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று ஆட்சியா் ப. ஆகாஷிடம் புகாா் மனு அளித்தனா்.
அதில், ‘நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஏற்கெனவே தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வந்த ரூ.12,500 ஊதியம் தற்போது ரூ.8,000-மாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குறைந்த ஊதியத்தில், குடும்பம் நடத்த முடியாமல் கடும் அவதியில் உள்ளோம். எனவே முன்பு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியமான ரூ. 12,500 மீண்டும் வழங்க வேண்டும்.
மேலும் தற்போது பிடிக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் பாா்க்கும் போக்கை கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.
