அரசலாறு முகத்துவாரத்தில் மினி மின் கோபுரம்

அரசலாறு முகத்துவாரம் அருகே படகு ஓட்டுநர்களின்  வசதிக்காக மின் கோபுரம் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.
Updated on
1 min read

அரசலாறு முகத்துவாரம் அருகே படகு ஓட்டுநர்களின்  வசதிக்காக மின் கோபுரம் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. இது அடுத்த 10 நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பபட்டது.
காரைக்கால் அரசலாறு முகத்துவாரத்தின் இரு புறங்களிலும், படகுகள் மீன்பிடித் துறைமுகத்திற்கு சென்று திரும்ப வசதியாக பொதுப்பணித்துறையால் கடல் பகுதியில் கருங்கல் கொட்டப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று உள்ளிட்ட காரணங்களால், கடலுக்குச் செல்லும் படகு மற்றும் துறைமுகத்திற்குத் திரும்பும் விசைப்படகுகள் கருங்கல் மீது மோதி சேதமடைந்துவிடுவதாகவும், இருள் சூழ்ந்திருப்பதால் இந்த நிலை என மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இந்தப்  பகுதியில் போதிய வெளிச்சம் இருக்கும் வகையில் மின் சாதனங்கள் பொருத்தவேண்டும் எனவும் கோரியிருந்தனர். மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் உத்தரவின்பேரில் மீன்வளத் துறை நிர்வாகம், ரூ.15 லட்சம் செலவில் முகத்துவாரத்தின் ஒரு புறத்தின் கருங்கல் மீது மினி மின் கோபுரம் அமைப்புக்கான பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கியது.  இந்த திட்டப்பணி நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குநர் நடேசப்பிள்ளை திங்கள்கிழமை கூறும்போது, மீனவர்கள் வசதிக்காக முகத்துவாரத்தின் கருங்கல் மீது 2 மின் கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. சோலார் வசதியுடன் இது செயல்படும். சோதனைப் பணிகள் யாவும்  ஏற்கெனவே நிறைவுபெற்றுவிட்டது. அடுத்த 10 நாள்களில் முறைப்படி செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
மீனவர்கள் வரவேற்பு : காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250 விசைப்படகுகள் நிறுத்தப்படுகின்றன. இதுதவிர, அரசலாற்றின் கரையில் தமிழகத்தைச்  சேர்ந்த விசைப்படகுகள் நிறுத்தப்படுகின்றன. மீன் 
வளத்துறையின் இந்த ஏற்பாடு குறித்து மீனவர்கள் கூறும்போது, துறைமுக முகத்துவாரத்தில் போதிய வெளிச்சம் இல்லை. கருங்கல் மீது படகு மோதி சேதமடைந்துவிடுகிறது. சில சமயங்களில் சேதமான படகை மீட்க கூடுதலான படகுகளைக்கொண்டு இழுக்கவேண்டியுள்ளது. அதிகமான செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில், மீன்வளத்துறை நிர்வாகம் மின்சார வசதியை ஏற்படுத்த செய்திருக்கும் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. இரவு நேரத்தில் முகத்துவாரத்தில் படகு சிக்காமல் இயக்குவதற்கு இந்த திட்டம் உதவும் என நம்புகிறோம் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com