காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை: மந்தகதியில் முதல்கட்டம் - நிலை தெரியாமல் அடுத்தக் கட்டம்

வளரும் நகரத்துக்கேற்ற திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காரைக்கால் மேற்கு
Updated on
3 min read

வளரும் நகரத்துக்கேற்ற திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை என்கிற ரூ. 76 கோடி திட்டத்தில் முதல்கட்டப் பணி இன்னும் நிறைவடைந்து தொடங்குவதற்கான சூழல் தெரியவில்லை. ஆட்சியாளர்களின் கண்டுகொள்ளாத போக்கால் கேட்பாரற்று இந்த திட்டப் பணி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 2 -ஆவது பெரிய பிராந்தியமாக காரைக்கால் திகழ்கிறது. உயர்கல்வி நிலையங்களாக என்.ஐ.டி., ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்கள் என பல உயர்கல்வி நிலையங்களுடன் காரைக்கால் கல்விக் கேந்திரமாக உருவெடுத்துவருகிறது.
கார்ப்பரேட் நிறுவன வழியில், காரைக்காலில் தனியார் துறைமுகமும், பெரு நிறுவன வரிசையில் ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்கலும் உள்ளன.
ஆன்மிக வட்டத்தில், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் (ஸ்ரீ சனீஸ்வர பகவான் தலம்), காரைக்கால் அம்மையார் கோயில் ஆகியன வெளியூர் பக்தர்களை ஈர்கக்கூடியதாக விளங்குகிறது. சுற்றுலாவைப் பொருத்தவரை, காரைக்கால் கடற்கரை மட்டுமே உள்ளது.
காரைக்காலில் தொழில் வளர்ச்சி என்பது பூஜ்யம் என்று சொல்லும் அளவில் வந்துவிடாத வகையில் ஆங்காங்கே ரசாயன தொழிற்சாலை, சோப்பு தயாரிப்பு ஆலை, டைல்ஸ் கல் தயாரிப்பு ஆலைகள் என சொற்ப எண்ணிக்கையில் செயல்படுகின்றன.
காரைக்காலில் தொழில் வளர்ச்சியும், சுற்றுலா வளர்ச்சியும் பெருமளவுக்கு உயராததற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக சாலை வசதி குறிப்பிடப்படுகிறது.  தொழிற்சாலைகள் புதுச்சேரி மாநிலத்தில் அமைக்கப்பட்டால் பல்வேறு வரிச்சலுகைகள் உண்டு என இருந்த காலத்தில் தொழிற்சாலைகள் பெருகிக் காணப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வரி அமலுக்கு வந்த பிறகு, காரைக்கால் போன்ற பின்தங்கிய பிராந்தியத்தில் குறிப்பாக சாலை வசதி மேம்பாடு இல்லாத, விமானப் போக்குவரத்து வசதிகள் இல்லாத இடத்தில் தொழிற்சாலைகள் இருப்பதால் எந்த பயனுமில்லை என இருந்த தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
ஆன்மிகம், சுற்றுலா, கல்வி, தொழிற்சாலை என எந்தவொரு துறையினருக்கும் சாதகமாக இருக்க வேண்டியது சாலைகள். ஆனால், காரைக்காலை பொருத்தவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் நிதியாதாரமின்மையால் பராமரிப்பில் கண்டுகொள்ளப்படவே இல்லை. நகருக்குள் உள்ள சிறிய சாலைகள் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி, அரசு நிதியில் ஓரளவுக்கு சீர் செய்யப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மட்டும் தரத்தில் உள்ளது. காரைக்கால் முதல் அம்பகரத்தூர் சாலை மேம்பாட்டுப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. காரைக்கால் நகரில் சாலைகள் ஆக்கிரமிப்பு, சாலைகள் பராமரிப்பின்மை போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகிவிட்டது.
இதுவொரு புறமிருக்க, புதுச்சேரி - காரைக்காலுக்கு இரு பிராந்தியத்தினர் பயணிப்பது அதிகம். சென்னை முதல் புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் செல்லும் அனைத்து வாகனங்களும் காரைக்காலை கடந்தே செல்ல வேண்டும்.
குறிப்பாக, விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்து, நில ஆர்ஜிதப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் காரைக்காலுக்குள் வருவதற்குள் காரைக்காலில் மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றிவிட புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை முனைப்புக் காட்டியது. 
முதல்கட்டமாக திருமலைராயன்பட்டினம் பகுதியில் திருமலைராஜனாறு பாலம் முதல் போலகம் வரையிலான 3 கி.மீ. தூரம் இருவழி கிழக்குப் புறவழிச்சாலைப் பணியை நிறைவேற்றி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
காரைக்கால் நகரில் மேற்கு புறவழிச்சாலைத் திட்டமாக கடந்த 2014 -ஆம் ஆண்டு  முதல்கட்ட சாலைப் பணி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக கீழகாசாக்குடி பகுதி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்குப் புறமாக புறவழிச்சாலை 3.20 கி.மீ. தூரம் காரைக்கால் வாஞ்சியாற்றுப் பாலம் வரையில் ரூ.21 கோடி திட்டமாகவும், வாஞ்சியாற்றுப் பாலத்திலிருந்து தெற்குத் திசையில் உள்ள திருமலைராஜனாற்று பாலம் பகுதி வரை 5.5 கி.மீ. தூரம் ரூ. 55 கோடி திட்ட மதிப்பில் 2 -ஆவது கட்டமாக தொடங்கும் வகையிலும் திட்டம் வகுத்து, முதல்கட்ட சாலைப் பணி தொடங்கப்பட்டது. 
இந்த இருவழிச் சாலைப் பணிக்குத் தேவையான நிலத்தை அரசு நிர்வாகம் ஏற்கெனவே கையப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்கிறது. இதனால் முதல்கட்டப் பணியாக, சாலைக்கான  நிலத்தில் 4 அடி உயரம், சில இடங்களில் 6 அடி உயரம் என மணல் நிரப்பி பணிகளை தொடங்கியது. திட்டம் தொடங்கப்பட்டது முதல் மந்தகதியில் நடக்கிறதே தவிர, முதல்கட்ட சாலைப் பணி இதுவரை நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரவில்லை.
முதல்கட்டப் பணியே நிறைவடையாத நிலையில், வாஞ்சியாறு பாலம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரை என்கிற 2-ஆம் கட்டப் பணி எப்போது தொடங்கும், அதற்கு நிதியாதாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது.
பெருகும் விபத்து: காரைக்கால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை என்பது நகருக்குள் ஊடுருவி செல்லத்தக்கதாக இருக்கிறது. ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால், வாகனங்கள் பயணிப்பு வெகு சிரமத்தை ஏற்படுகிறது. கடுமையான நெரிசல் மிகுந்த சாலையில் வாகனங்கள் பயணிப்பதால், விபத்துகள் தினமும் நடக்கின்றன. கனரக வாகனங்கள் போக்குவரத்தும் இச்சாலையில் அனுமதிக்கப்படுவதாலேயே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான ஜெ. சிவகணேஷ் கூறியது: காரைக்கால் வளரும் நகரமாக உள்ள நிலையில், சாலை வசதியை மேம்படுத்துவது மிகவும் அவசியம். மேற்கு புறவழிச்சாலைப் பணி கடந்த 5 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெறுகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, தீர்வை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். புதுச்சேரி - காரைக்காலுக்கான சாலைப் போக்குவரத்தில் மிகவும் இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. பொதுவாக வெளியூர்க்காரர்கள் காரைக்காலில் வணிகம் செய்ய வருவது குறைந்துவிட்ட நிலையில், சுற்றுலா, தொழிற்சாலைகள் நடத்துவோர் நலன் உள்ளிட்டற்றை கருத்தில்கொண்டு காரைக்காலில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
காரைக்கால் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஜி. பக்கிரிசாமி கூறியது :   காரைக்கால் மேற்குப் புறவழிச்சாலை திட்டப் பணி என்பது ரூ. 76 கோடி மதிப்பிலான திட்டமாகும். முதல்கட்டப் பணி ரூ. 21 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் தார் கலவை போட வேண்டியது மட்டுமே பாக்கியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெற்றுவிடும். முதல்கட்டப் பணி நிறைவடைந்தால், திருநள்ளாறிலிருந்து புதுச்சேரி, சென்னைக்கு பயணிப்போரும், இந்த பகுதியிலிருந்து திருநள்ளாறு வருவோரும் சிரமமின்றி பயணிக்க முடியும். காரைக்கால் நகருக்குள்ளும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பட வாய்ப்புள்ளது.
வாஞ்சியாறு பாலம் முதல் 2-ஆவது கட்டப் பணிக்கு நிதியாதாரத்தைத் திரட்ட முயற்சித்து வருகிறோம். இதற்கிடையே விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டம் நிறைவேறும்போது புறவழிச்சாலையின் 2 -ஆவது கட்டம் அதில் அடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், முதல்கட்ட சாலைப் பணியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம் என்றார்.
அவ்வப்போது காரைக்கால் ஆட்சியர் தலைமையில் திட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, திட்ட முடக்கம் குறித்து விவாதித்து, தீர்வுக்கான ஆலோசனைகள் தரப்படும். அந்த செயல்பாடுகள் தற்போது காரைக்காலில் முடங்கியிருக்கிறது.
எனவே புறவழிச்சாலைப் பணியை (இரு கட்டம்) விரைந்து முடிக்க அனைத்து நிலையிலும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இதில் புதுச்சேரி ஆட்சியாளர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காரைக்காலில் புறவழிச்சாலைகள் என்பது வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும். எனவே ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்பு.  காரைக்காலில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளோர் வெவ்வேறு கட்சியினராக இருந்தாலும், காரைக்கால் என்கிற வளர்ச்சி, பொது நலன் 
சார்ந்த சிந்தனையில் அனைவரும் கைகோர்த்தால் சாதிக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதற்கான வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயல்படாத வரை, புறவழிச்சாலை என்ன, எந்தவொரு திட்டமும் மந்தகதியிலும், முடக்கத்திலுமே வரும் காலத்திலும் காட்சித்தரும் என்கின்றனர்  சமூகப் பார்வையாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com