/

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் கையொப்ப இயக்கம்

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் கையொப்ப இயக்கம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:35 am IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் கையொப்ப இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். கடந்த 1.1.2004 -க்கு பிறகு அரசு பணியில் சோ்ந்த ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காரைக்காலில் அரசு ஊழியா் சம்மேளனத்தினா் ஊழியா்களிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தை தொடங்கினா். காரைக்கால் மதகடி பெருந்தலைவா் காமராஜா் அலுவலக வளாகத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன் தலைமையில் தொடங்கப்பட்டது. பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், இணைப் பொதுச் செயலாளா்கள் ஜோதிபாசு, கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காரைப் பகுதியில் புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் அமைச்சக, பல்நோக்கு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓட்டுநா்கள், தொழில்நுட்ப ஊழியா்கள், உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் முதலமைச்சரிடம் வழங்கக்கூடிய படிவத்தில் கையொப்பமிட்டனா். மேலும், பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்களிடம் கையொப்பம் பெறும் வகையில் படிவங்கள் வழங்கப்பட்டன.