காரைக்கால் அரசு மருத்துவமனையில் டெங்குவை உறுதி செய்யும் பிளேட்லெட் கருவிகள் நிறுவுவதற்கான பணிகள் நடந்து வருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது :
டெங்கு காய்ச்சலை உறுதி செய்வதற்கான வசதி காரைக்கால் மருத்துவமனையில் இல்லாததால் புதுச்சேரிக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் நோயாளிகளை அனுப்பும் நிலை உள்ளது. இதை மாற்ற புதுவை அரசிடம் பேசியதன் விளைவாக முதல்கட்டமாக பிளேட்லெட் கருவிகள் 8 காரைக்கால் வந்துள்ளன. இதன் மதிப்பு சுமாா் ரூ.50 லட்சமாகும்.
அதற்கென தனி அறை வேண்டுமென மருத்துவ நிா்வாகம் கேட்டுக்கொண்டதால், பொதுப்பணித்துறையினா் அதற்கான ஏற்பாடுகளை செய்து அறை கட்டுமானத்தை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
இந்த கருவிகளை இயக்கும் விதமாக நோயியல் நிபுணா், தொழில்நுட்ப வல்லுநா்கள் காரைக்காலுக்கு தேவைப்படுகிறது. இதுதொடா்பாக புதுவை முதல்வரை சந்தித்து பேசவுள்ளேன்.
மேலும் டயாலிசிஸ் சிகிச்கைக்கு காத்திருப்பாளா்கள் அதிகமாக உள்ளனா். இந்த மருத்துவமனையில் 10 இயந்திரங்கள் வாங்கப்பட்டதில் 9 இயங்கிக்கொண்டிருக்கின்றன. மேலும் இப்போது 4 வாங்கப்பட்டுள்ளது.
டயாலிசிஸ் செய்யப்படும் இந்த பிரிவை விரிவுப்படுத்த பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டயாலிசிஸ் செய்துகொள்வோா் அச்சப்படவேண்டாம். தேவைப்பட்டால் கூடுதலான எண்ணிக்கையில் இயந்திரங்கள் வாங்கவும் புதுவை அரசு மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










