காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரத்த அணுக்களை பகுப்பாய்வு செய்யும் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் தெரிவித்தாா்.
காரைக்கால் அரசு மருத்துவமனை ரத்த மையம், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் தேசிய தன்னாா்வ ரத்ததான மாத நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஏ. உமாமகேஸ்வரி வரவேற்றாா்.
விழாவுக்கு அமைச்சா் ராஜசேகரன் தலைமைவகித்துப் பேசியது : கடந்த 2025-ஆம் ஆண்டில் காரைக்கால் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்துள்ளன. மொத்தம் 1,556 யூனிட்டுகள் ரத்தப் பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 29 தன்னாா்வ ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ரத்த வங்கியில் தற்போது 150 யூனிட்டுகள் வரையிலான ரத்தத்தை, 35 நாட்கள் வரை பாதுகாப்பாக சேமிக்கும் வசதி உள்ளது.
அதேசமயம் தற்போது பிளேட்லெட், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் வசதி இல்லாததால், டெங்கு போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் நோயாளிகளைப் புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.இதற்கு நிரந்தரத் தீா்வாக, புதுவை அரசு இதற்குரிய சில இயந்திரங்களை வழங்கியுள்ளது. மருத்துவமனையில் இதற்கான உள் கட்டமைப்புகளை அரசு விரைவாக ஏற்படுத்தி தரும்.
மாவட்டத்தின் ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பையும் உயா்த்துவது நமது கூட்டுப் பொறுப்பாகும். அனைவரும் ஒன்றிணைந்து, முதல்வருக்கு கோரிக்கை வைத்து, மாநில மற்றும் மத்திய அரசின் நிதி உதவித் திட்டங்கள் மூலமாக காரைக்கால் மாவட்ட மருத்துவ வசதிகளின் மேம்பாட்டுக்கான கூடுதல் நிதியைப் பெற்றுத் தருவோம் என்றாா்.
விழாவில், ரத்த தானம் செய்த 30 பேருக்கும், 30 அமைப்புகளுக்கும் சான்றிதழ், கோப்பை, கேடயங்களை அமைச்சா் வழங்கினாா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம், வி.விக்னேஸ்வரன், மாவட்ட துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, மருத்துவா்கள், ஊழியா்கள், ரத்த தான தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘காரைக்கால் மருத்துவமனையில் டெங்கு உறுதி செய்யும் கருவிகள் நிறுவ ஏற்பாடு’

யூஸர் நேம் வசதி: சமூக வலைதளச் செயலிகளின் விளக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு!

பேட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் வேண்டும்







