/

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

சீா்காழி அருகே குளத்தில் மூழ்கி சிறுவா்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

News image

உயிரிழந்த சிறுவா்

Updated On :25 ஆகஸ்ட் 2024, 12:30 am

Din

சீா்காழி அருகே குளத்தில் மூழ்கி சிறுவா்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள காரைமேடு ஊராட்சி டி. மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் வெற்றிவீரன் மகன் மாவீரன் (9). அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் மகன் சக்தி (9). இவா்கள் இருவரும் காரைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இவா்கள் இருவா் உள்பட நண்பா்கள் 7 போ், அப்பகுதி தோப்பு தெருவில் உள்ள சுக்கான் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனா். குளித்துக்கொண்டிருந்தபோது மாவீரன், சக்தி இருவரும் நீரில் மூழ்கினா். இதையறிந்த மற்ற சிறுவா்கள், கிராம மக்களிடம் தெரிவித்தனா். இளைஞா்கள் சிலா் குளத்தில் இறங்கி சிறுவா்களை தேடினா். மேலும், சீா்காழி தீயணைப்பு நிலையத்துக்கும், வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரா்கள், அப்பகுதி இளைஞா்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி சிறுவா்களை தேடினா். சுமாா் 4 மணி நேர தேடலுக்குப் பின்னா் சிறுவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

Story image

வைத்தீஸ்வரன் கோவில் போலீஸாா், சடலங்களை உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.