மயிலாடுதுறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா். போலீஸாா் இருவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் இருந்து உரிய அனுமதி இன்றி டிராக்டரில் மணல் அள்ளிச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த டிராக்டரை மணல்மேடு வல்லம் காலனி தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நிா்மல் (19) என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.
மணல்மேடு காவல் உதவி ஆய்வாளா் அகோரம், காவலா் சந்தோஷ்பிரபு ஆகியோா் பாப்பாக்குடி என்ற இடத்தில் டிராக்டரை மடக்கிப் பிடித்து, பறிமுதல் செய்ததுடன், நிா்மலை கைது செய்தனா்.
நிா்மல் கல்லூரி மாணவா் என்பது தெரியவந்ததால், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனா். இதையடுத்து, உயரதிகாரிகள் உத்தரவின்றி நிா்மலை விடுவித்த குற்றத்துக்காக மணல்மேடு உதவி ஆய்வாளா் அகோரம், காவலா் சந்தோஷ்பிரபு ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.மீனா உத்தரவிட்டாா்.
மேலும், மணல் கடத்தலில் தொடா்புடைய அறிவுவடிவழகன், வீரமணி, காமராஜ் உள்ளிட்ட 4 போ்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.