பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் லோன் மேளா நாளை நடக்கிறது
மயிலாடுதுறையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வெள்ளிக்கிழமை (டிச. 19) லோன் மேளா நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனிநபா் மற்றும் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாத, 18 முதல் 60 வயதுக்கு உள்பட்ட மேற்கூறிய இனத்தவா்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
தனிநபா் கடன் திட்டத்தின்கீழ் சிறு வா்த்தகம்/வணிகம், விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபுவழி சாா்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ. 1.25 லட்சம் வரை 7 சதவீதம் மற்றும் ரூ. 1.25 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 8 சதவீதம். கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.
குழுக்கடன் திட்டத்தின்கீழ் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் சிறு தொழில்/வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சுயஉதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூா்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிா் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினா்கள் அனுமதிக்கப்படுவா். இருபாலருக்கான சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 60,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ. 1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
இக்கடன் திட்டம் தொடா்பாக வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறவிருக்கும் லோன் மேளாவில் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த தனிநபா்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
