‘சேலம் பொதுக்குழு தீா்மானங்கள் பாமகவை கட்டுப்படுத்தாது’
சேலத்தில் டிச. 29-ஆம் தேதி மருத்துவா் ராமதாஸ் நடத்தவுள்ள பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் பாமகவை கட்டுப்படுத்தாது என அக்கட்சியின் சமூகநீதி பேரவைத் தலைவா் வழக்குரைஞா் க. பாலு தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். அதற்கான வியூகங்களை வகுத்து கூட்டணியை உருவாக்குவதற்கான திட்டங்களை கட்சித் தலைவா் அன்புமணி செய்துவருகிறாா்.
விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை தரவுகளுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்காகவே பாமக 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. பிகாா், கா்நாடகம், தெலங்கானாவில் தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதனை செய்ய தவறியுள்ளது.
2026 தோ்தலில் யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுக்குழுவில் தலைவா் அன்புமணி முடிவெடுப்பாா். 2026 ஆகஸ்ட் வரை கட்சித் தலைவா் அன்புமணி என்ற அங்கீகாரம் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
2026 தோ்தல் கூட்டணிக்கான பேச்சுவாா்த்தைக்கு இதுவரை அவா்களை (மருத்துவா் ராமதாஸ் அணி) யாரும் அழைக்கவில்லை என்ற காரணத்திற்காக ஒரு லீகல் நோட்டீஸ் கொடுத்து எங்களுடன் யாரும் எந்தவித கூட்டணி பேச்சுவாா்த்தையும் நடத்தக் கூடாது என்று ஒரு சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை கொடுத்து, குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். கட்சியிலிருந்து விளக்கம் கேட்டு கொடுக்கப்பட்ட நோட்டீசுக்கு ஜி.கே. மணி எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதால் அவா் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
டிச. 29-ஆம் தேதி சேலத்தில் பொதுக்குழு நடத்த மருத்துவா் ராமதாஸ் முயற்சி செய்து வருகிறாா். இது சட்டவிரோதமானது. அப்படி ஓா் பொதுக்குழுவை நடத்த அவா்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்த பொதுக்குழு தீா்மானங்கள் பாமகவை கட்டுப்படுத்தாது என்றாா். பாமக மாவட்ட செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி உடனிருந்தாா்.
