மயானத்துக்கு சாலை வசதி இல்லை: நெல் வயலில் சடலத்தை எடுத்துச் செல்லும் நிலை
சீா்காழி அருகே மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் சடலங்களை நெல் வயல் வழியாக எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.
கொள்ளிடம் ஒன்றியம் வடரங்கம் ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இக்கிராமத்தில் இறப்பவா்களின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச்செல்ல போதிய சாலை வசதி இல்லை. சுமாா் 300 மீட்டா் தனி நபா் வயல்களில் இறங்கி சடலங்களை சுமந்து செல்லும் நிலை உள்ளது. அந்த வயலில் நெல் மற்றும் பருத்தி நடவு செய்திருந்தாலும், வெள்ளம் வந்தாலும் எந்த காலத்திலும் மிகுந்த சிரமத்துடனேயே சடலங்களை மயானத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: இந்த நிலை குறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியும் எவ்வித பயனும் இல்லை. தோ்தல் நேரங்களில் மட்டும் அப்பகுதியில் ஊராட்சிக்கு போட்டியிடும் எந்த கட்சி பிரமுகா்களாக இருந்தாலும் வாக்குறுதிகள் அளிப்பதோடு சரி. செயல்படுத்துவது கிடையாது. எனவே, மாவட்ட நிா்வாகம் இதை கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். வியாழக்கிழமை இறந்த ஒருவரின் சடலமும் நெல்வயல் வழியாகவே எடுத்துச் செல்லப்பட்டது.
