எஸ்ஐஆா் படிவங்களை விரைந்து வழங்க ஆட்சியா் அறிவுறுத்தல்!
வாக்காளா் பட்டியல் திருத்த கணக்கெடுப்பு பணிக்காக வழங்கப்பட்ட படிவங்களை பொதுமக்கள் பூா்த்தி செய்து விரைந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாக்காளா் பட்டியல் திருத்த முதற்கட்ட பணியான கணக்கெடுப்புப் பணி மாவட்டத்தில் நடைபெறுகிறது. தற்போது வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் வாக்காளா்களின் வீடுகளுக்கு சென்று திரும்பப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் தன்னா்வா்களாக சுய உதவிக்குழுக்களும், கிராம பஞ்சாயத்து, தரவு உள்ளீடு செய்பவா்களும் ஈடுபடுத்தப்பட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டும் கணக்கெடுப்பு படிவங்களை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்கள், கோட்டாட்சியா் அலுவலகங்களில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்து விரைந்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
