பயன்கள் நிறைந்த பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
இயற்கை நமக்குத் தந்த பெரும் கொடைகளில் ஒன்று பனை மரம். தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும் இந்த மரம் மனிதர்களுக்கு சலிப்பின்றி


இயற்கை நமக்குத் தந்த பெரும் கொடைகளில் ஒன்று பனை மரம். தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும் இந்த மரம் மனிதர்களுக்கு சலிப்பின்றி பலன் தரக்கூடியது. தற்போது அழிக்கப்பட்டுவரும் இந்த மரங்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பனை மரத்துக்கு "தமிழ் மரம்' என்ற பெயரும் உண்டு. இம்மரத்திலிருந்து கிடைக்கும் ஒவ்வொன்றும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. பதநீர், பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனநுங்கு என சத்து மிகுந்த உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கின்றன. அத்துடன், இதன் ஓலை மற்றும் மட்டைகளைக் கொண்டு அழகுப் பொருள்களும், விசிறி மட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன. பனை ஓலை வீட்டுக்கு மேற்கூரை அமைக்கப் பயன்படுகிறது.
இவ்வாறு பயன்கள் நிறைந்த பனை மரங்கள் தற்போது பெருமளவில் வெட்டி சாய்க்கப்படுகின்றன. குறிப்பாக, செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவது வேதனையானது. நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் கடலோர கிராமங்களிலும் காட்டுச்சேரி, தில்லையாடி, மருதம்பள்ளம், காலமநல்லூர், பிள்ளைபெருமாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களிலும் பனை மரங்கள் அதிகமாக உள்ளன.
20 ஆயிரம் பனை மரங்களை பயிரிட்ட கல்வியாளர்...
காட்டுச்சேரி ஊராட்சித் தலைவராக 1996-ஆம் ஆண்டு பதவி வகித்த பாண்டியராஜன் என்கிற கல்வியாளர் காட்டுச்சேரி, சமத்துவப்புரம் பகுதி மற்றும் ஆற்றங்கரையோரம் என காட்டுச்சேரி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பனை விதைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பயிரிட்டுள்ளார். அவைகளில், பல ஆயிரக்கணக்கான மரங்கள் இன்றும் பயன் தந்துகொண்டிருக்கின்றன. மழை, வெள்ளங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், மண்ணின் தன்மை மாறாமல் இருப்பதற்காகவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு பனை மரங்களை வளர்த்தவர்கள் இருக்கும் அதே ஊரில்தான் இன்று மின் வாரியத்தினர், மின் பாதை அமைப்பதற்காக ஏராளமான பனை மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர். இதேபோல், செங்கல் சூளைக்காகவும் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. இம்மரங்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பலன் தரும் பனைநுங்கு...
கடந்த 30 ஆண்டுகளாக கோடை காலங்களில் பனை நுங்கு விற்பனை செய்யும் சிங்காரம் கூறியது:
கோடை காலங்களில் நாள்தோறும் பனை நுங்கு விற்பனை அதிகமாக இருக்கும். தினமும் ரூ.500- க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும். நுங்கு சாப்பிடுவதால் உடல் சூடு தணிகிறது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை இருக்காது. குழந்தைகளுக்கும் பனை நுங்கை கொடுக்கலாம். பனை நுங்கை வெட்டி பிரித்தெடுத்தது போக மீதமுள்ள ஓடுகளை நிலத்தில் கொட்டி, உரமாகப் பயன்படுத்தினால் நிலத்தின் உப்புத் தன்மை சரியாகி விடும் என்றார்.
இத்தகைய நன்மைகள் அளிக்கும் பனை மரங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மின் பாதைகள் அமைக்க பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், பனையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...