/

மணலையும் பொன் விளையும் பூமியாக்கலாம்: ஓய்வுபெற்ற வேளாண் பேராசிரியரின்  சாதனை முயற்சி

பொறையாறு அருகே எதற்கும் உதவாத மணல் பரப்பில் அடர் நடவு முறை மூலம் 1,500 மாங்கன்றுகளை பயிரிட்டு ஓய்வுபெற்ற வேளாண் பேராசிரியர் சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:22 am

வி.ஜவகர்

பொறையாறு அருகே எதற்கும் உதவாத மணல் பரப்பில் அடர் நடவு முறை மூலம் 1,500 மாங்கன்றுகளை பயிரிட்டு ஓய்வுபெற்ற வேளாண் பேராசிரியர் சாதனை படைத்துள்ளார்.
நாகை மாவட்டம், பொறையாறு அருகேயுள்ள எருக்கட்டாஞ்சேரியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவர், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நெல் ஆராய்ச்சிக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரில் 5 ஏக்கர் மணல் பரப்பில் தீவிர விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, 2.5 ஏக்கர் மணல் பரப்பில் 1,500 மாங்கன்றுகளை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மணல் பகுதியில் சத்து குறைவாக இருந்ததால் மாங்கன்றுகள் நட தகுதி இல்லை என வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர். இதை சவாலாக எடுத்துக்கொண்டு, அந்த மணலை சத்துள்ளதாக மாற்ற முயற்சித்தேன். அதற்காக முதலில் சணப்பைப் பயிர் வளர்த்து அதை மணலுடன் டிராக்டர் மூலம் உழுது மணலை சத்துள்ளதாக ஆக்கினேன். பின்னர், 2.5 ஏக்கர் மணல் பரப்பில் 1,500 மாங்கன்றுகளை அடர் நடவு முறையில் பயிரிட்டுள்ளேன். இந்த மாங்கன்றுகளை வளர்ப்பதற்கு அருகில் ஒரு பண்ணைக் குட்டை வெட்டியுள்ளேன். அந்த பண்ணைக் குட்டையிலிருந்து 15 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. அதில் குழாய் அமைத்து மோட்டார் மூலம் மாங்கன்றுகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த ஒவ்வொரு மாங்கன்றுகளுக்கும் இடையே குழாய் அமைத்து, சொட்டு நீர்ப் பாசனமாக தண்ணீர் விடுகிறேன். இதன்மூலம் ஒரு மணிநேரத்தில் ஒரு செடிக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இந்த மணலுக்கு தோத்தாபுரி, அல்போன்சா, நீலம் ஆகிய மாங்கன்றுகள் அதிக மகசூலை கொடுக்கும். 
இதனால், இந்த மூன்று வகை மாங்கன்றுகளை பயிரிட்டுள்ளேன். கரைசல் முறையிலேயே குழாய் மூலம் திரவமாக உரங்கள் இடப்படுகின்றன. இந்த மாங்கன்றுகள் மூன்று ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கிவிடும்.  உயரம் நான்கு அடிதான் இருக்கும். நான்கு மீட்டர் அகலத்திலும் மூன்று மீட்டர் இடைவெளியிலும் மாங்கன்றுகள் நட்டுள்ளேன். 2.5 ஏக்கரில் 1,500 மாங்கன்றுகளை நட்டுள்ளேன். இவை தவிர, சொட்டு நீர்ப் பாசன முறையில் நிலக்கடலை பயிரிட்டு வருகிறேன். மேலும், மீதியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தில் வேங்கை, தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறேன். பாசனத்துக்கு உதவாத மணலை கூட நாம் முயன்றால் பொன் விளையும் பூமியாக்க முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.