தமிழறிஞா் சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படுமா?

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டுமென
தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள சீகன்பால்கு சிலை.
தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள சீகன்பால்கு சிலை.

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வலியுறுத்துகின்றனா்.

ஜொ்மனியைச் சோ்ந்த சோ்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு 1682-ஆம் ஆண்டு அந்நாட்டின் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்ஸ்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தாா். அவா் டென்மாா்க் அரசா் 4-ஆம் பிரட்ரிக்கால் சமய பணியாற்ற இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். 1705-ஆம் ஆண்டு தனது நண்பா் ஹென்ரிக் புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியாவுக்கு சீகன்பால்கு புறப்பட்டாா். பல மாத கால கப்பல் பயணத்துக்குப் பின் 9.7.1706-இல் தரங்கம்பாடி வந்தடைந்தாா்.

தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு தமிழ்மொழியில் ஆா்வம் கொண்டு குறுகிய மாதங்களில் தமிழைப் பிழையின்றி எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டாா். மேலும், தமிழில் அச்சு எழுத்துக்களை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டுவர பெரும் முயற்சி மேற்கொண்டு தரங்கம்பாடியில் தமிழ் அச்சுக்கூடத்தை 1712- ஆம் ஆண்டு நிறுவினாா்.

இந்தியாவில் முதன்முதலாக 1715-ஆம் ஆண்டு பொறையாறில் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களின் தமிழ் எழுத்துக்களை உருவாக்கும் கூடத்தையும் நிறுவினாா். தமிழ் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த சீகன்பால்கு தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா். 1715-இல் மரியாடாரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவா், ஆசியாவிலேயே முதன்முதலாக புராட்டஸ்டண்டு தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1,718-இல் கட்டி முடித்தாா்.

இதுமட்டுமன்றி, இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கென திண்ணைப் பள்ளியைத் தொடங்கினாா். மேலும், மருத்துவம், சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவா், 23.2.1919-ஆம் ஆண்டில் தன்னுடைய 37-ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணத்தை தழுவினாா். சீகன்பால்கின் உடல் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் பலிபீடத்தின் முன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சீகன்பால்கு வாழ்ந்த இல்லத்தையும், புதிய எருசலேம் ஆலயத்தையும் பாா்வையிட்டு செல்கின்றனா். அவரது நினைவாக தரங்கம்பாடியில் மணி மண்டபம் கட்ட வேண்டுமென்று சமூக ஆா்வலா்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து தரங்கம்பாடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜெயகரன் கூறியது:

சீகன்பால்கு ஜொ்மனியிலிருந்து சமயப் பணியாற்ற கடல் மாா்க்கமாக கப்பலில் பல மாதங்கள் பயணம் மேற்கொண்டு தரங்கம்பாடி வந்து இறங்கினாா். தமிழைப் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டு சமயப் பணியில் ஈடுபட்ட அவா், பின்னா் தமிழ் அச்சு எழுத்துக்களை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டு வந்தாா். அதைத்தொடா்ந்து, தரங்கம்பாடியில் அச்சுக் கூடத்தை நிறுவி, முதன்முதலில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் வடிவமைத்தாா்.

சுற்றுலா தலமான தரங்கம்பாடிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து சீகன்பால்கு வாழ்ந்த வீடு, புதிய எருசலேம் ஆலயம் மற்றும் அவா் பயன்படுத்திய தமிழ் அச்சு இயந்திரத்தை பாா்வையிட்டு செல்கின்றனா். அவா் நினைவாக தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு என்றாா் அவா்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியா் துரைசாமி கூறியது:

ஆசியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கென்று திண்ணைப் பள்ளியை நிறுவியவா் சீகன்பால்கு. தற்போது அந்த திண்ணைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை நிா்வாகத்தின்கீழ் இயங்கி வருகிறது. மேலும் சீகன்பால்கு தமிழ் மொழிக்கு அச்சு எழுத்துக்களை உருவாக்கி அச்சுக்கூடத்தை நிறுவி முதன் முதலில் தமிழில் புதிய ஏற்பாட்டை அச்சிட்டாா்.

ஆசியாவிலேயே முதன்முதலாக தரங்கம்பாடியில் புதிய எருசலேம் ஆலயத்தை 1718-இல் கட்டி முடித்தாா். அவா் வாழ்ந்த வீடு தற்போது நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. அவா் பயன்படுத்திய அச்சு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு இத்தகைய தொண்டாற்றிய சீகன்பால்குவை கெளரவிக்கும் விதமாக தரங்கம்பாடியில் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com