தமிழறிஞர் சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படுமா?

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞர் சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழறிஞர் சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படுமா?

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞர் சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சமூக 
ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த சேர்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு 1682-ஆம் ஆண்டு அந்நாட்டின் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்ஸ்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். அவர் டென்மார்க் அரசர் 4-ஆம் பிரட்ரிக்கால் சமய பணியாற்ற இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1705-ஆம் ஆண்டு தனது நண்பர் ஹென்ரிக் புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியாவுக்கு சீகன்பால்கு புறப்பட்டார். பல மாத கால கப்பல் பயணத்துக்குப் பின் 9.7.1706-இல் தரங்கம்பாடி வந்தடைந்தார்.  தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு குறுகிய மாதங்களில் தமிழைப் பிழையின்றி எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டார். மேலும், தமிழில் அச்சு எழுத்துக்களை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டுவர பெரும் முயற்சி மேற்கொண்டு தரங்கம்பாடியில் தமிழ் அச்சுக்கூடத்தை 1712- ஆம் ஆண்டு நிறுவினார். இந்தியாவில் முதன்முதலாக 1715-ஆம் ஆண்டு பொறையாறில் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களின் தமிழ் எழுத்துக்களை உருவாக்கும் கூடத்தையும் நிறுவினார். தமிழ் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த சீகன்பால்கு தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். 1715-இல் மரியாடாரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், ஆசியாவிலேயே முதன்முதலாக புராட்டஸ்டண்டு தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1,718-இல் கட்டி முடித்தார்.
 இதுமட்டுமன்றி, இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கென திண்ணைப் பள்ளியைத் தொடங்கினார். மேலும், மருத்துவம், சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர், 23.2.1919-ஆம் ஆண்டில் தன்னுடைய 37-ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணத்தை தழுவினார். சீகன்பால்கின் உடல் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் பலிபீடத்தின் முன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சீகன்பால்கு வாழ்ந்த இல்லத்தையும், புதிய எருசலேம் ஆலயத்தையும் பார்வையிட்டு செல்கின்றனர். அவரது நினைவாக தரங்கம்பாடியில் மணி மண்டபம் கட்ட வேண்டுமென்று சமூக ஆர்வலர்களும்,  பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இதுகுறித்து தரங்கம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயகரன் கூறியது: சீகன்பால்கு ஜெர்மனியிலிருந்து சமயப் பணியாற்ற கடல் மார்க்கமாக கப்பலில் பல மாதங்கள் பயணம் மேற்கொண்டு தரங்கம்பாடி வந்து இறங்கினார். தமிழைப் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டு சமயப் பணியில் ஈடுபட்ட அவர், பின்னர் தமிழ் அச்சு எழுத்துக்களை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து, தரங்கம்பாடியில் அச்சுக் கூடத்தை நிறுவி, முதன்முதலில் பரிசுத்த வேதாகமத்தின்  புதிய ஏற்பாட்டை தமிழில் வடிவமைத்தார்.
 சுற்றுலா தலமான தரங்கம்பாடிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து சீகன்பால்கு வாழ்ந்த வீடு, புதிய எருசலேம் ஆலயம் மற்றும் அவர் பயன்படுத்திய தமிழ் அச்சு இயந்திரத்தை பார்வையிட்டு செல்கின்றனர். அவர் நினைவாக தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்றார் அவர். 
இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் துரைசாமி கூறியது:
ஆசியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கென்று திண்ணைப் பள்ளியை நிறுவியவர் சீகன்பால்கு. தற்போது அந்த திண்ணைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகிறது. மேலும் சீகன்பால்கு தமிழ் மொழிக்கு அச்சு எழுத்துக்களை உருவாக்கி அச்சுக்கூடத்தை நிறுவி முதன் முதலில் தமிழில் புதிய ஏற்பாட்டை அச்சிட்டார். 
ஆசியாவிலேயே முதன்முதலாக தரங்கம்பாடியில் புதிய எருசலேம் ஆலயத்தை 1718-இல் கட்டி முடித்தார். அவர் வாழ்ந்த வீடு தற்போது நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. 
அவர் பயன்படுத்திய அச்சு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு இத்தகைய தொண்டாற்றிய சீகன்பால்குவை கௌரவிக்கும் விதமாக தரங்கம்பாடியில் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com