திரு‌க்​கடை​யூ‌ர் நூலக க‌ட்டு​மா​ன‌‌ப் பணி: தொடங்குவது எப்போது?

திருக்கடையூரில் கிளை நூலகத்துக்கு எனத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், கட்டுமானப் பணி தொடங்குவது எப்போது என வாசகர் வட்டம் ஆவலுடன் காத்திருக்கிறது.
திரு‌க்​கடை​யூ‌ர் நூலக க‌ட்டு​மா​ன‌‌ப் பணி: தொடங்குவது எப்போது?

திருக்கடையூரில் கிளை நூலகத்துக்கு எனத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், கட்டுமானப் பணி தொடங்குவது எப்போது என வாசகர் வட்டம் ஆவலுடன் காத்திருக்கிறது.
நாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள பிரசித்தி பெற்ற அமிர்தகடேசுவரர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த 1970-ஆம் ஆண்டு வாடகை கட்டடத்தில் தொடங்கப்பட்ட கிளை நூலகம் இதுநாள் வரை அதே இடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. இங்கு திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், கண்ணங்குடி, இரவணியன்கோட்டகம், நட்சத்திரமாலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 2,003 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 27,503 புத்தகங்கள் உள்ளன.
இதில் வரலாறு, நாவல், இலக்கியம், கவிதை, கட்டுரை, ஆன்மிகம், அரசியல், சட்டம், சமையல், அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் காணப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்கள் இருப்பதால், மாணவர்கள் அடிக்கடி வந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர். தினசரி நாளிதழ்களும் வாசகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகின்றன.
இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு திருக்கடையூர் மேலவீதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் நூலகம் கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆயினும், இதுநாள் வரை கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. தொடர்ந்து, அதே வாடகை ஓட்டு கட்டிடத்தில்தான் நூலகம் இயங்குகிறது. 
இதுகுறித்து வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கூறியது: திருக்கடையூரில் 50 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில்தான் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செய்தித்தாள் மற்றும் பல்வேறு நூல்களைப் படித்து வருகின்றனர். இந்த நூலகத்தில் போதிய இடவசதி இல்லாமல் வாசகர்கள் சிரமப்படுகின்றனர். அரசுக்குச் சொந்தமான இடத்தில் நூலகம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டாலும், இதுவரை நூலகம் கட்டப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. 
இதனால், நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நூல்களைப் பராமரிக்க முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் புத்தகங்கள் அனைத்தும் நனைந்து சேதத்துக்குள்ளாகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில், அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கிளை நூலகத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்றார் அவர். 
இதுகுறித்து மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ 
கூறியதாவது:
மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமான புத்தகங்களும், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் கிடைப்பதால், திருக்கடையூர் கிளை நூலகத்தை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதேவேளையில், போதுமான இடவசதி இல்லாததால், மிகுந்த சிரத்தை எடுத்து படிக்க நேரிடுகிறது. இதனால், போட்டித் தேர்வர்களின் கவனம் சிதறுகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதியாவது, ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில்  நவீன வசதிகளுடன் கூடிய கிளை நூலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com