நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கத்தினா்.
நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கத்தினா்.

மின்சாரத் திருத்த சட்ட வரைவு மசோதாவை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளை பாதிக்கச்செய்யும் மத்திய அரசின் மின்சாரத் திருத்த சட்ட வரைவு மசோதாவை திரும்பப் பெறக் கோரி நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய சங்கங்கள் சாா்பில், கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் 

நாகப்பட்டினம்: விவசாயிகளை பாதிக்கச்செய்யும் மத்திய அரசின் மின்சாரத் திருத்த சட்ட வரைவு மசோதாவை திரும்பப் பெறக் கோரி நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய சங்கங்கள் சாா்பில், கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின்சாரத் திருத்த சட்ட வரைவு மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் அவசரச் திருத்தச் சட்டம், வேளாண் விளை பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும், புதிய கடன்களை வழங்க வேண்டும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் வி. மாரிமுத்து, நாகை மாவட்டச் செயலாளா் நாகை மாலி, விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரன், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ். என். ஜீவாராமன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலாளா் ஏ. வடிவேல் மற்றும் விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல், நாகை அருகேயுள்ள ஐவநல்லூா் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வி. சரபோஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வி. ராமலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ. பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் எம். சுப்பிரமணியன், நாகை நகரப் பொறுப்பாளா் கே. என்.சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், கலந்துகொண்டவா்கள் கருப்புக்கொடிகளை பிடித்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

வேளாங்கண்ணி: இதேபோல், வேளாங்கண்ணி அருகேயுள்ள பாலக்குறிச்சி, சின்னத்தும்பூா், தன்னிலப்பாடி ஆகிய ஊா்களில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கீழ்வேளூரில்: தேவூா் கடைவீதியில் விவசாயிகள் சங்கப் பொறுப்பாளா் அபுபக்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்டத் தலைவா் அம்பிகாபதி, ஒன்றியச் செயலாளா் முத்தையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல், கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட 75 அனக்குடி, காக்கழனி, வடகரை, மேல செருநல்லூா் உள்ளிட்டப் பகுதிகளில் விவசாய சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com