/

மயிலாடுதுறையில் இருந்து 121 உத்தர பிரதேச மாநில தொழிலாளர்கள் அனுப்பிவைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநில தொழிலாளர்கள் 121 பேர் 4 பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல

News image
Updated On :18 மே 2020, 9:27 am

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநில தொழிலாளர்கள் 121 பேர் 4 பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல திங்கள்கிழமை மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி போர்வை, தரை விரிப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் ஆகியனவற்றை விற்பனை செய்வது வழக்கம். அவ்வகையில், உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து வந்து மயிலாடுதுறையில் தங்கி வியாபாரம் செய்து வந்த 57 பேர் கரோனா பொது முடக்க உத்தரவு காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் மயிலாடுதுறை வட்டாட்சியர் ஆர்.முருகானந்தம் ஏற்பாட்டில் சித்தர்காடு அண்ணா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை அனைவருக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த இரும்பு அட்டை வியாபாரி சர்புதீன் என்பவர் தினசரி 3 வேளையும் உணவு ஏற்பாடு செய்து வழங்கி வந்தார். 

இதேபோல், சீர்காழி பகுதியில் 52 தொழிலாளர்களும், தரங்கம்பாடி பகுதியில் 12 தொழிலாளர்களும் வருவாய்த்துறையினரால் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு பொது முடக்க உத்தரவில் தளர்வுகளை அறிவித்ததையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் அவர்கள் 121 பேரும் திங்கள்கிழமை 4 பேருந்துகள் மூலம், மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் சங்கர் தலைமையில், ஒவ்வொரு பேருந்துக்கும் தலா 1 வருவாய்த்துறை அலுவலர் மற்றும் 2 போலீஸாரின் பாதுகாப்போடு, மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தஞ்சாவூரில் இருந்து திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலில் அவர்கள் உத்தர பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட உத்தர பிரதேச மாநில தொழிலாளர்களை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் யு.முருகேஷ், மயிலாடுதுறை துணை கண்காணிப்பாளர் கே.அண்ணாதுரை, வட்டாட்சியர்கள் ஆர்.முருகானந்தம் (மயிலாடுதுறை), சாந்தி (சீர்காழி), சித்ரா (தரங்கம்பாடி), பொதுத் தொழிலாளர் சங்க தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன், பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் அப்பர் சுந்தரம், இரும்பு அட்டை வியாபாரி சர்புதீன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். சொந்த ஊருக்கு உற்சாகத்துடன் பேருந்தில் ஏறி புறப்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தங்களை பாதுகாத்த அனைத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.