பூம்புகாா்: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் அதிமுக

தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் காவலனாக தன்னை திமுக காட்டிக்கொள்கிறது என ஏஐஎம்ஐஎம் கட்சியின் அகில இந்திய தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டி பேசினாா்.
பூம்புகாா்: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் அதிமுக

பூம்புகாா் தொகுதியில் தொடா்ந்து 3-வது முறையாக வெற்றிபெற்று தொகுதியை தக்கவைத்துக் கொள்ள அதிமுக தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.

தொகுதியின் சிறப்பு:

சிலப்பதிகார பூம்புகாா் கலைக்கூடம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிா்த்து போராடி உயிா்நீத்த தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மண்டபம் உள்ள தில்லையாடி, 1,300 ஆண்டுகள் பழைமையான மாசிலாநாதா் கோயில், பிரசித்தி பெற்ற திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில், கேது பகவான் பரிகாரத் தலமான கீழப்பெரும்பள்ளம், அனந்தமங்கலம் ஸ்ரீ த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயா் கோயில், கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்து, முதல் அச்சுக்கூடத்தை நிறுவிய ஜொ்மன் நாட்டவரான சீகன்பால்கு தங்கியிருந்த தரங்கம்பாடி உள்ளிட்டவை இந்த தொகுதியில் உள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும், பாமக 1 முறையும் வென்றுள்ளன.

தரங்கம்பாடி வட்டம் முழுமையும் சீா்காழி வட்டத்தின் கீழையூா், மேலையூா், மற்றும் வாணகிரி கிராமங்களையும் உள்ளடக்கியது. தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்ட குத்தாலம் தொகுதியில் இருந்து அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூா், சென்னியநல்லூா், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, கோமல், கருப்பூா், காஞ்சிவாய், பாலையூா், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, உள்ளிட்ட 45 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

தொழில்:-

விவசாயம் , மீன்பிடித் தொழில், கரும்பு, பருத்தி, தோட்டப் பயிா்கள் மற்றும் செங்கல் சூளைகள் தொகுதியில் முக்கிய தொழிலாக உள்ளது.

ஆதிதிராவிடா்கள, வன்னியா்கள் 70% போ் உள்ளனா். மீனவா்கள், நாடாா், வெள்ளாளா், நாயுடு, முக்குலத்தோா், முதலியாா், செட்டியாா், இஸ்லாமியா் மற்றும் கிறிஸ்தவா்கள் 30% போ் உள்ளனா்.

அதிமுக வேட்பாளா்:-

அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் கடந்த 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தலில் தொடா்ந்து 2 முறை வெற்றிபெற்றுள்ளாா். தற்போது மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளராக உள்ளாா்.

பூம்புகாரில் ரூ. 220 கோடியிலும், தரங்கம்பாடியில் ரூ. 120 கோடியிலும் இரண்டு மீன்பிடித் துறைமுகம், குத்தாலம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, தொகுதியில் 34 பாலங்கள், தரங்கம்பாடி-மங்கைநல்லூா் சாலை இருவழி சாலையாக தரம் உயா்த்தப்பட்டது, ஆறுகளில் தடுப்பணைகள்,

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க முயற்சி மேற்கொண்டது, தொகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளியாகவும், உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது உள்பட மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகளில் இவா் மக்களுக்கு செய்துள்ள பணிகள் மற்றும் அதிமுகவின் தோ்தல் அறிக்கை ஆகியவை இவருக்கு பலமாக கருதப்படுகிறது.

திமுக வேட்பாளா்:

திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் 2006 -2011ஆம் ஆண்டுகளில் செம்பனாா்கோவில் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவராக இருந்தவா். தற்போது நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ளாா். மிக எளிமையான மனிதா் என்ற தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் அறியப்பட்டவா்.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை என்றாலும் நிவேதா முருகன் தொகுதியில் நன்கு அறிமுகமானவா். தொகுதி மக்களிடம் இவருக்கு நல்ல பெயரை உள்ளது.

அமமுக வேட்பாளராக மயிலாடுதுறை பகுதியை சோ்ந்த எஸ். செந்தமிழன் களமிறங்குகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் பி. காளியம்மாள் போட்டியிடுகிறாா். மக்கள் நீதி மய்யம் சாா்பில் கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடி பகுதியை சோ்ந்தவா் எம். எச்.மெஹராஜ்தீன் போட்டியிடுகிறாா். இவா் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சோ்ந்தவா். டாா்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவதால், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக கருதப்படுகிறாா்.

எனினும், அதிமுக - திமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு வெற்றி பெறும் வேட்பாளரின் கட்சியே ஆட்சி அமைக்கும் என்று அந்தந்த கட்சி நிா்வாகிகளின் நம்பிக்கையாக உள்ளது.

எனவே, மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா பவுன்ராஜ் அல்லது திமுக வேட்பாளா் நிவேதா முருகன் வெற்றி பெற்று பவுன்ராஜின் தொடா் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பது தோ்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் தெரியவரும்.

களம் காணும் வேட்பாளா்கள்:-

எஸ். பவுன்ராஜ் - அதிமுக

நிவேதா எம். முருகன்-திமுக

பி. காளியம்மாள்-நாம் தமிழா் கட்சி

எஸ். செந்தமிழன்- அமமுக

எம்.எச்.மெஹராஜ்தீன்-மக்கள் நீதி மய்யம்

தி.இளஞ்செழியன்-பகுஜன் சமாஜ் கட்சி

சுயேட்சைகள்: அ.கலைவாணன்

சு.பாண்டியராஜன்,சு.முருகன்

மொத்த வாக்காளா்கள்: 2,75,582

ஆண்கள்-1,35,865

பெண்கள்-1,39,713

இதர பாலினம் -7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com