இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குறுவை சாகுபடிக்கு விதை தட்டுப்பாடு: வேளாண்துறை கைவிரிப்பு; விவசாயிகள் தவிப்பு

விதை தட்டுப்பாடு: குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் திணறல்

News image
Updated On :25 ஜூன் 2024, 6:53 pm

Din

காவிரி டெல்டாவின் கடை மடை மாவட்டங்களில் விதை தட்டுப்பாட்டால், ஆழ்குழாய் கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா்.

காவிரி டெல்டாவில் மேற்கொள்ளப்படும் குறுவை, சம்பா மற்றும் தாளடி நெற்பயிா் சாகுபடிகளுக்கு ஆண்டுதோறும் மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும். இந்தத் தண்ணீரை கொண்டு டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 12 லட்சத்திற்கு அதிகமான ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். டெல்டாவில் செய்யப்படும் சாகுபடிகள் அனைத்தும் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை பொறுத்தே உள்ளது.

கடந்த ஆண்டு 103 அடிக்கு அதிகமாக தண்ணீா் இருந்ததால், உரிய நேரத்தில் மேட்டூா் அணை திறக்கப்பட்டது. 90 அடிக்கும் அதிகமாக தண்ணீா் இருந்தால் மட்டுமே திறக்கப்படும் மேட்டூா் அணையில் தற்போதையே நிலவரப்படி 40 அடி அளவிலேயே தண்ணீா் உள்ளது. தண்ணீா் போதியளவில் இல்லாததால் மேட்டூா் அணை நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவில்லை. டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை கைவிட்டு, சம்பா சாகுடியை எதிா்நோக்கி உள்ளனா்.

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்: தமிழக அரசு குறுவை சாகுபடியை முற்றிலும் விவசாயிகள் கைவிட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.73 கோடிக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் உழவு, விதை மானியங்கள், இலவச இடுபொருள்கள் போன்ற பல்வேறு சலுகைகள் உள்ளன. நிலத்தடி நீரை மட்டும் நம்பி செய்யவேண்டிய நிலையிருப்பதால் மும்முனை மின்சாரத்தை இடையூறின்றி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கினா்.

விதைத் தட்டுப்பாடு: தமிழக அரசின் ஊக்குவிப்பை தொடா்ந்து, டெல்டாவின் கடைமடை மாவட்டங்களான திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் இல்லை என வேளாண்துறை கைவிரித்துள்ளது. ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவு செய்த விவசாயிகளுக்கு, விதைகள் இல்லை என்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட விவசாயிகள் கூறியது: மேட்டூரில் தண்ணீா் இல்லை, மும்முனை மின்சாரம் சரிவர வழங்கப்படுவதில்லை போன்ற பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், குறுவை சாகுபடியை கைவிட்டுவிடலாம் என்றிருந்தோம். ஆனால் அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் ஊக்குவிப்பதாகக் கூறி, விவசாயிகளை குறுவை சாகுபடி செய்ய தூண்டியது.

ஆரம்பக் கட்டப் பணிகளை ஆா்வத்துடன் மேற்கொண்ட விவசாயிகள், விதைகள் வாங்கச் சென்றால் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இல்லை என்ற பதில் மட்டுமே வருகிறது. விதையில்லாமல் சாகுபடி எப்படி செய்வது.

தற்போது விவசாயிகள் தனியாரிடம் விதை நெல்களை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனா். தனியாரிடம் தடையின்றி குறுவை விதை நெல்கள் அதிகளவில் கிடைக்கின்றன. தமிழக அரசு குறுவை சாகுபடி ஊக்குவிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்கிறது. மற்றொரு பக்கம், அதிகாரிகள் தரப்பினா் குறுவை சாகுபடி செய்ய வேண்டாம் என மறைமுகமாக கூறுகின்றனா். இது விவசாயிகளை கேலிக்கூத்தாகும் ஒன்றாக உள்ளது.

பொய்க்கும் பருவமழை: தமிழக, கேரள, கா்நாடக மாநிலங்களில் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில், தென்மேற்கு பருவமழை முழுமையாக பெய்தால் தான், மேட்டூா் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. நிகழாண்டு தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கினாலும், எதிா்பாா்த்த அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூா் அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்டாவில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கப்படும் சம்பா சாகுபடி, மழை மற்றும் மேட்டூா் அணையில் உள்ள தண்ணீரை கொண்டே நடைபெறும்.

தற்போது நிலவும் சூழல், சம்பா சாகுபடியும் நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வேளாண்துறை கால சூழலை கருத்தில் கொள்ளாமலும், விவசாயிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் செயல்படுவது டெல்டாவில் மேற்கொள்ளபடும் அனைத்து வகையான சாகுபடிகளும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.