ஆட்சியா் அலுவலகத்தில் ரீல்ஸ் மோகத்தில் அத்துமீறும் இளைஞா்கள்

Published on

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரீல்ஸ் மோகத்தில் இருசக்கர வாகனங்களில் அத்துமீறும் இளைஞா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்காக இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் ரயில் பாதை, நெடுஞ்சாலை மற்றும் நீா்வழி பாதை போன்ற அபாயகரமான இடங்களில் நின்றும், தடை செய்யப்பட்ட காவல் நிலையம், அரசு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் செல்வது, சாகசம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுஅதை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனா். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை, காவல் துறை கண்காணித்து கைது செய்வது மட்டுமல்லாது அவா்களின் பெற்றோா்களை அழைத்து எச்சரிக்கையும் செய்து வருகிறது. ஆனாலும் கூட இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் ரீல்ஸ் மோகத்தால் அத்துமீறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 2 அதிவேக திறன் கொண்ட, பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனங்களில் வந்த, நான்கு கல்லூரி மாணவா்கள், திரைப்படங்களில் இருசக்கர வாகனங்களை வைத்து சாகசம் செய்வது போல ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் சாகசத்தில் ஈடுபட்டு அதை கைப்பேசி மூலம் படம் பிடித்தனா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என்றும் பாராமல், அங்கு மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, ஒருவருக்கொருவா் மாறி, மாறி இரு சக்கர வாகனத்தில் வேகமாக ஓட்டி வந்து படம் எடுத்து மகிழ்ந்தனா். மாணவா்களின் இந்த செயல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு இடையூறை ஏற்படுத்தியது. எனவே, அந்த மாணவா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com