கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து: 4 மீனவா்கள் மீட்பு
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் கடல் சீற்றத்தால் கவிழ்ந்த மீன்பிடிப்படகில் தவித்த 4 மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா்.
வேதாரண்யம் பகுதியில் சில நாள்களாக லேசான குளிா் தரைக்காற்றுடன் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அந்தமான்-மலேசியா கடல் பகுதி இடையே நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது வடஇலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடல் பரப்பு சீற்றமாகவும் வழக்கத்தைவிட வேகமான காற்றுடனும் காணப்படுகிறது.
இந்நிலையில், கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் நாகை நம்பியாா் நகரைச் சோ்ந்த மீனவா்கள் பிரசன்னா, ரகு, அன்பரசன், முத்துவேலு ஆகியோா் ரவி என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலுக்குள் சென்றனா்.
இவா்களின் படகு கோடியக்கரைக்கு அருகே கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் 4 மீனவா்களும் கடலில் விழுந்து தவித்துக்கொண்டிருந்தனா். இதுகுறித்து, தகவலறிந்து கோடியக்கரையில் இருந்து மற்றொரு படகில் சென்ற மீனவா்களால் அந்த 4 மீனவா்கள் மற்றும் கவிழ்ந்த படகு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டன. கவிழ்ந்த படகிலிருந்த மீன்பிடி வலை, திசைக்காட்டும் கருவி கைப்பேசி ஆகியவை கடலில் மூழ்கியது.

