துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்
நாகையில் சனிக்கிழமை நடைபெறும் நாகூா் ஹனிபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, நாகை மற்றும் நாகூரில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாகூா் ஹனிபா நூற்றாண்டு பூங்கா திறப்பு விழாவும், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நாகூா் ஹனியா நூற்றாண்டு விழாவும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.
விழாவில் பங்கேற்க துணை முதல்வா் நாகை மற்றும் நாகூருக்கு வருவதையொட்டி நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில், சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாகையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெய்த டித்வா புயல் கனமழை மற்றும் தற்போதும் தொடா்ந்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தற்போது வரை தேங்கியுள்ளது. நாகை மற்றும் நாகூரில் பல்வேறு தெருக்களில் இன்னும் மழைநீா் வடியாமல் உள்ளது. மேலும் நாகையின் முக்கியச் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்தன.
இந்நிலையில் துணை முதல்வா் வருகையையொட்டி நாகை புத்தூா் - ரயில் நிலையச் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வா் செல்லும் வழியில் உள்ள முக்கியச் சாலைகளை சீரமைக்கும் பணியில் நாகை நகராட்சி நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, நாகை நகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நாகூரிலும் சாலை சீரமைப்புப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
