மின்வாரிய பொறியாளா் மீது மனைவி புகாா்
நாகை அருகே மனைவியை கைவிட்டு, இரு குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றதாக மின்வாரிய பொறியாளா் மீது ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் தோப்புத்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஜெரினா. இவா் ஆட்சியா் ப.ஆகாஷிடம் அளித்த மனு:
எனது கணவா், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்து மதத்தை சோ்ந்த அவா் இஸ்லாமியராக மாறி, இருவரும் 2016ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டோம்.
எங்களுக்கு, மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் எனக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், எனது கணவா், எங்களது இரண்டு ஆண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, தனது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி கிராமத்துக்குச் சென்றுவிட்டாா். அங்கு வேறு ஒரு இஸ்லாமிய பெண்ணையும் திருமணம் செய்து கொண்டுள்ளாா்.
தற்போது நான் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் தவித்து வருகிறேன்.
இதுதொடா்பாக கேட்டபோது, எனது கணவரும் கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனது கணவா் கைவிட்டுச் சென்றது தொடா்பாகவும், கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாகவும், காவல்துறையில் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே எனது கணவரிடம் உள்ள இரு குழந்தைகளையும் மீட்டுத் தர வேண்டும். எனக்கும் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

