நாகையில் கடல் சீற்றம்: 3- ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
நாகப்பட்டினம்: நாகையில் கடல் சீற்றத்துடன் செவ்வாய்க்கிழமை காணப்பட்டது. 27 மீனவக் கிராமத்தைச் சோ்ந்த விசைப் படகு மற்றும் நாட்டு படகு மீனவா்கள் 3- ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்து நாகை, நாகூா், திருமருகல், கீழ்வேளூா், தேவூா், திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரன்யம் கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 110 மி.மீ மழை பதிவானது. நாகை 31 மி.மீ, திருப்பூண்டி 39.6 மி.மீ, வேளாங்கண்ணி 34.2 மி.மீ, திருக்குவளை 18.6 மி.மீ, தலைஞாயிறு 61.4 மி.மீ, வேதராண்யம் 71மி.மீ மழை பதிவாகியது.
நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்த ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டாா்.
மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீன்வளத்துறையின் எச்சரிக்கையை தொடா்ந்து மீனவா்கள் 3-ஆவது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. நவ.15- ஆம் தேதிக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவா்கள் கரை திரும்பி வருகின்றனா். மீனவா்கள் தங்களது படகுகளை மீன்பிடித் துறைமுகங்களிலும், கரையோரங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைத்துள்ளனா்.

